Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஹசாரேக்கு ஆதரவாக சென்னையில் குவியும் இளைஞர்கள்

ஹசாரேக்கு ஆதரவாக சென்னையில் குவியும் இளைஞர்கள்

ஹசாரேக்கு ஆதரவாக சென்னையில் குவியும் இளைஞர்கள்

ஹசாரேக்கு ஆதரவாக சென்னையில் குவியும் இளைஞர்கள்

UPDATED : ஆக 21, 2011 02:21 PMADDED : ஆக 20, 2011 11:43 PM


Google News
Latest Tamil News

சென்னை:இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம், சென்னை ஒன்றியம் சார்பில், ஜன் லோக்பால் சட்டத்தை பார்லிமென்டில் நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை திருவான்மியூரில், கடந்த 16ம் தேதி முதல், 36 பேர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.



ஊழலுக்கு எதிராகவும், ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்தக் கோரியும், ராம்லீலா மைதானத்தில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அவருக்கு ஆதரவாக, சென்னையில் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.



இதுகுறித்து, இந்திய ஊழல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான, ஜாகீர் உசேன் கூறியதாவது:டில்லியில், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருப்பதற்கு ஆதரவு தெரிவித்து, செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு, தமிழக அரசு நிபந்தனையற்ற முறையில், அனுமதி வழங்க வேண்டும். லஞ்சம் இல்லாமல், எதையும் செய்ய முடியாது என்ற எண்ணம், இந்திய மக்களிடம் உள்ளது.இதைப் போக்க, ஜன் லோக்பால் சட்டம், கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.



1942ம் ஆண்டு, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் நடந்தது. தற்போது 2011ல், 'கொள்ளையனே வெளியேறு' போராட்டம், அன்னா ஹசாரே தலைமையில், நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும் தான், பிறப்பு முதல் இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை, அனைத்துக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் அனைவரும் முன்வர வேண்டும். ஜன் லோக்பால் சட்டம் நிறைவேறும் வரை, எங்கள் போராட்டம் தொடரும்.

இவ்வாறு, ஜாகீர் உசேன் கூறினார்.



அண்ணா நகரில் இருந்து வந்துள்ள, இல்லத்தரசி ரமாதேவி கூறியதாவது:நான், இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. சாதாரண மக்கள் தான், வாக்களித்து எம்.எல்.ஏ., எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்கின்றனர். அதேபோல, அவர்கள் தவறு செய்யும் போது, தூக்கி எறியும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். ஊழல் இல்லாத, இந்தியா வேண்டும் என்பதில், நாங்கள் உறுதியாக உள்ளோம்.இவ்வாறு, ரமாதேவி கூறினார்.



கல்லூரி மாணவி அனு கூறியதாவது:இந்த நிகழ்ச்சியில், உண்ணாவிரதம் துவங்கியது முதல், கலந்து கொண்டிருக்கிறேன். அன்னா ஹசாரே என்ற தனி மனிதன், நல்ல காரியத்திற்காகப் போராடுகிறார். அவருக்கு ஆதரவளிப்பது, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் கடமை. அரசு நிறைவேற்றியுள்ள லோக்பால் சட்டத்தில், ஒன்றும் கிடையாது. அதனால், ஜன் லோக்பால் சட்டத்தை, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உடனே நிறைவேற்ற வேண்டும். ஊழலுக்கு எதிராக, மக்கள் ஒரு வாரமாகப் போராடி வருகின்றனர். ஆனால், அரசு மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.இவ்வாறு, அனு கூறினார்.

இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், ஐ.டி., ஊழியர்கள், பொது மக்கள் உள்ளிட்ட, அனைவரும் கலந்து கொண்டனர்.



தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் 36 பேரை, திருவான்மியூர் துரு மருத்துவமனையின் டாக்டர் நவீன் தலைமையில், நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பரிசோதித்து வருகின்றனர்.மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், இரு சக்கர வாகனம் மற்றும் கார் மூலம், சென்னையின் அனைத்து இடங்களுக்கும், பேரணியாகச் சென்று அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.



ஊழலுக்கு எதிராக கொந்தளித்தது கோவை : பல்லாயிரம் பேர் படையென திரண்டு ஆவேசம் கொங்கு மண்டலத்தின் அங்கமான கோவை மக்கள், நேற்று 'கொடிசியா' மைதானத்தில் பொங்கியெழுந்து, 'நாங்கள், 'அன்னா' பக்கம்' என்பதை ஆணித்தரமாக நிரூபித்தனர். ஊழலுக்கு எதிராக படையெடுத்த பல்லாயிரம் பேர், நாட்டை வேட்டையாடும் 'கொள்ளைக் கும்பலுக்கு' எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்தினர்.



ஜன்லோக்பால் மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தி, டில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து, 'ஊழலுக்கு எதிராக கோவை' அமைப்பு சார்பில் கோவை, பீளமேடு, கொடிசியா வளாகம் அருகிலுள்ள மைதானத்தில் மக்கள் சங்கமம் நேற்று நடந்தது. மாலை 5.00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், 4.00 மணி முதலே ஊழலுக்கு எதிராக படையெடுத்த கோவை மக்கள் தேசிய கொடிகளுடன் சாரை, சாரையாக திரண்டு வந்து சங்கமித்தனர். சிறுவர், சிறுமியர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், கூலித்தொழிலாளர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஊழலுக்கு எதிரான ஆவேசத்துடன் பங்கேற்றனர்.



'அன்னாவுக்கு ஆதரவு' என்ற வாசகத்துடன் ஒவ்வொருவரின் சட்டையிலும் 'பேட்ஜ்' இடம்பெற்றிருந்தது. ' 'ஊழலுக்கு எதிராக போர் துவங்க இப்படியொரு அழைப்புக்காகவே இத்தனை நாட்களாக காத்திருந்தோம்' என்பதை போன்று பல்லாயிரம் பேர் திரண்டனர். மேடையின் பின்னமைப்பில் காந்தி, அன்னா ஹசாரேவின் படங்களும், 'சிறுமை கண்டு பொங்குவாய் வா! வா!' என்ற வாசகமும் வசீகரத்துடன் பளிச்சிட்டன. தேசப்பற்றை தூண்டும் விதத்தில் பாரதியார் பாடலை இசைமழையாக டி.எம்.,கிருஷ்ணா குழுவினர் பொழிய, மைதானத்தில் திரண்டிருந்தவர்கள் வயது வித்தியாசமின்றி தாளம் தட்டி இசை மழையில் நனைந்தனர். மாலை 6.00 மணிக்கெல்லாம் மைதானம் நிரம்பி வழிய ஆரம்பித்ததும், ஊழலுக்கு எதிரான கொங்கு மக்களின் கோபம் கொந்தளித்தது.



இசைமழையின் இடையே, 'பாரத மாதாவுக்கு ஜே!' 'வந்தே மாதரம்!' கோஷம் விண்ணதிர எதிரொலித்தது. விழாவில் பங்கேற்றவர்களில் சிலர், ஆவேசத்துடன் மேடையேறி ஊழலுக்கு எதிராக முழங்கினர். கோவையைச் சேர்ந்த 83 வயது பெரியவர் ராஜகோபாலன் பேசியபோது மைதானமே அதிர்ந்தது.



''மிகச்சிறிய கூட்டம் ஒன்று, அரசு என்ற பெயரில், ஒட்டுமொத்த நாட்டையும் கொள்ளையடிக்க பார்க்கிறது. இவற்றை வேடிக்கை பார்க்க 100 கோடி மக்கள் என்ன முட்டாள்களா...? எங்களுக்கு உணர்ச்சி இல்லையா...? இந்நாட்டை '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் எங்கு கொண்டு போய் நிறுத்தும்...? ஒருவரிடம் 'பிக்பாக்கெட்' அடித்த நபர் பிடிபட்டால் தர்ம அடி கொடுக்கிறோம். நம் ஒவ்வொருவர் பாக்கெட்டில் இருந்தும் கோடிக்கணக்கில் பிக்பாக்கெட் அடித்திருக்கிறார்களே ஊழல்வாதிகள், அவர்களை என்ன செய்யலாம்?'' என கேள்வி எழுப்பினார். தள்ளாத வயதிலும் இவரது ஆக்ரோஷ பேச்சு, பல ஆயிரம் பேரின் நாடி நரம்புகளையும் தட்டிவிட்டது.



அடுத்து பேசிய அமிர்தா பல்கலையின் பிரமோத், ''ஜன்லோக்பால் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். உலக அரங்கில் இந்தியா ஊழல் நாடு என்ற அவப்பெயரை போக்க வேண்டும்,'' என்றார்.



'கொடிசியா' தலைவர் கந்தசாமி பேசுகையில், ''ஊழல் என்பது நம்மால் உருவாக்கப்பட்டது. நாம், காரியம் சாதிக்க நாம் 5,10 என கொடுத்து வளர்த்துவிட்டோம். இப்போது, அரசியல்வாதிகள் கஜானாவிலேயே கைவைக்க ஆரம்பித்துவிட்டார்கள்,'' என்றார்.



மாணவர் சத்யன், சிறுமி சஹானா ஆகியோரின் பேச்சு, ஊழல் பேர்வழிகளின் உறக்கத்தை நிச்சயம் கலைத்திருக்கும். ஊழலுக்கு எதிராக திரண்டிருந்த மக்களுக்கு ஜன்லோக்பால் குறித்து விளக்க, குர்தீப்சிங், வக்கீல் சி.ஜி.,குமார் ஆகியோர் 'கேள்வி - பதில்' பாணியில் மேடையில் உரையாடினர். ஜன்லோக்பால் என்றால் என்ன, என்று அறியாதவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது இவர்களின் உரையாடல் நிகழ்ச்சி.



இறுதியாக, இரவு 7.20 மணியளவில் மைதானத்திலிருந்த மின்விளக்குகள் அணைக்கப்பட்டு, ஊழல் இருளை அகற்ற மெழுகுவர்த்தி ஒளியேற்றப்பட்டது. மூன்று மணி நேர மக்கள் சங்கமத்தின் முத்தாய்ப்பாக நடந்த ஒளியேற்றும் நிகழ்வின்போது, 'வந்தே மாதரம்' கோஷம் நாடி, நரம்புகளை எல்லாம் தட்டிவிட்டது. பல ஆயிரக்கணக்கான மக்கள் தேசபக்தியை நெஞ்சில் ஏற்றியவாறு அமைதியாக கலைந்து சென்றனர்.



இந்நிகழ்ச்சியில், கோவையைச் சேர்ந்த பல நூறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது அமைப்பின் பேனர்களுடன் பங்கேற்றனர். 'ஊழலுக்கு எதிராக கோவை' அமைப்பின் நிர்வாகிகள் மேடையேறி தங்களை முன்னிலைப் படுத்திக்கொள்வதை தவிர்த்து, ஊழலுக்கு எதிரான குரலையே முன்னிறுத்தினர். இந்நிகழ்ச்சி, ஊழலுக்கு எதிரான போரில், கொங்கு மண்டலத்தின் அங்கமான கோவை மக்களின் கொந்தளிப்பு அதிகமாகவே வெளிப்பட்டது. 'கோவை மக்கள், 'அன்னா' பக்கம்' என்பதை நிரூபித்துக்காட்டினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us