Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மிக்சி, கிரைண்டர், மின் விசிறிக்கு விலை டெண்டர் திறப்பு

மிக்சி, கிரைண்டர், மின் விசிறிக்கு விலை டெண்டர் திறப்பு

மிக்சி, கிரைண்டர், மின் விசிறிக்கு விலை டெண்டர் திறப்பு

மிக்சி, கிரைண்டர், மின் விசிறிக்கு விலை டெண்டர் திறப்பு

ADDED : ஆக 08, 2011 11:45 PM


Google News

சென்னை : இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கான விலை டெண்டர் நேற்று திறக்கப்பட்டது.

தகுதி பெறும் நிறுவனங்களிடம், வரும் 15ம் தேதி, 'சப்ளை ஆர்டர்' தரப்படும் என சிவில் சப்ளைஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். செப்., 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்த நாளில், இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக, 1,350 கோடி ரூபாய் செலவில், 25 லட்சம் பொருட்களை வழங்குவதற்கான பணிகளை, தமிழக சிவில் சப்ளைஸ் துறை மேற்கொண்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் டெண்டர் அறிவிக்கப்பட்டு, ஜூலை 11ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதே நாளில், தொழில்நுட்ப டெண்டர் திறக்கப்பட்டதில், 53 நிறுவனங்கள் பங்கேற்றன. விண்ணப்பங்களில் கொடுத்த தகவல்கள் உண்மையானதா? விண்ணப்பித்த நிறுவனங்கள் சுயமாகவே பொருட்களை உற்பத்தி செய்யும் தகுதிகள் கொண்டதா? என்பதை நேரில் ஆய்வு செய்ய, மூன்று பேர் கொண்ட 30 கமிட்டிகள் அமைக்கப்பட்டன. இக்கமிட்டியினர், மும்பை, புனே, கோவை, டில்லி உட்பட பல இடங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று, ஆய்வு நடத்தினர். ஆய்வறிக்கை படி, 53 நிறுவனங்களில், 30 நிறுவனங்கள் தகுதி பெற்றன. மிக்சி தயாரிக்க 15 நிறுவனங்களில் ஆறும், மின் விசிறிக்கு 19 நிறுவனங்களில் 14ம், கிரைண்டருக்கு 19க்கு 10ம் தகுதி பெற்றன.

இந்நிறுவனங்களின் விலை நிர்ணய டெண்டர் நேற்று திறக்கப்பட்டது. சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மேலாண் இயக்குனர் வீரசண்முகமணி தலைமையில், வீடியோ பதிவுடன் டெண்டர் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மிகக் குறைந்த விலை நிர்ணயம் செய்த நிறுவனங்கள் முறையாக வரிசைப்படுத்தப்பட்டு, அவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தப்பட்டது. சிவில் சப்ளைஸ் கமிஷனர் பாலச்சந்திரன் தலைமையில், மேலாண் இயக்குனர் வீரசண்முகமணி மற்றும் நிதித் துறை பட்ஜெட் பிரிவு துணைச் செயலர் விஜய் மாருதி பிங்க்லே ஆகியோர் அடங்கிய கமிட்டி, பேச்சு வார்த்தையை நடத்தியது; இன்றும் இந்த பேச்சு தொடர்கிறது. இதுகுறித்து, சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் உயரதிகாரி ஒருவர் கூறும் போது, 'பேச்சு வார்த்தை முடிவில் குறைந்த விலைக்கு, நிபந்தனைப்படி தரமான பொருட்களை சப்ளை செய்ய விரும்பும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும். குறைந்தபட்ச விலையில் முதலில் இருக்கும் நிறுவனத்திற்கு, அவர்கள் கேட்கும் அளவுக்கு ஆர்டர் தரப்படும். பின், அதே விலைக்கு ஒப்புக் கொள்ளும் மற்ற நிறுவனங்களுக்கும் ஆர்டர் கொடுக்கப்படும். இதே முறைப்படி ஒவ்வொன்றிலும், தலா 25 லட்சம் பொருட்களை சப்ளை செய்யத் தேவையான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும். தகுதி பெறும் நிறுவனங்களிடம், வரும் 15ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, முறைப்படி ஆர்டர் தரப்படும். பின், செப்., 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்த நாள் விழாவில், இலவச பொருட்களை முதல்வர் ஜெயலலிதா வழங்குவார். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். மார்ச்சுக்கு பின் இரண்டாம் கட்ட வினியோகம் இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி தயாரிக்கும் தேர்வுப் பட்டியலில், பட்டர்பிளை, மகாராஜா, கிராம்ப்டன் க்ரீவ்ஸ், சவ்பாக்யா, ஜோதி, ஓரியண்ட், லஷ்மி, காஞ்சன், எல்.ஜி., அல்ட்ரா உட்பட 30 நிறுவனங்கள் உள்ளன. தேர்வாகும் நிறுவனப் பொருட்களில், நிறுவனப் பெயர்களுக்கு பதில், தமிழக அரசின் கோபுர முத்திரை தான் இடம் பெறும். ஆனால், பொருட்களின் உதிரி பாகங்கள் பகுதியில், நிறுவனப் பெயர் சிறிதாக இடம்பெறும். ஆர்டர் தரும் தேதியிலிருந்து, ஒரு மாதத்திற்குள் 2.5 லட்சம், இரண்டு மாதத்தில் 6.25 லட்சம், மூன்றாம் மாதத்தில் 10 லட்சமும், நான்கு மாதத்தில் 15 லட்சமும், ஐந்தாம் மாதத்தில் 20 லட்சமும், ஆறு மாதங்களில் 25 லட்ச பொருட்களையும் சப்ளை செய்ய, நிறுவனங்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் வரை முதல் கட்ட வினியோகமும், பின், இரண்டாம் கட்டமாக இலவச பொருட்கள் வினியோகம் துவங்கும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us