தி.மு.க., ஆட்சியில் குடிநீர் வடிகால் வாரியத்தில் ரூ.200 கோடி ஊழல்
தி.மு.க., ஆட்சியில் குடிநீர் வடிகால் வாரியத்தில் ரூ.200 கோடி ஊழல்
தி.மு.க., ஆட்சியில் குடிநீர் வடிகால் வாரியத்தில் ரூ.200 கோடி ஊழல்
UPDATED : அக் 09, 2011 05:36 AM
ADDED : அக் 09, 2011 01:37 AM
தமிழகத்தில், ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், குடிநீர் வடிகால் வாரியத்தில், 200 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகி உள்ளது.தமிழகத்தில், 550 கூட்டுக் குடிநீர் திட்டங்கள், தற்போது செயல்படுத்தப்படுகின்றன. இதன் பராமரிப்பு மற்றும் இயக்குதல் பணிகள் அனைத்தும், உள்ளாட்சி நேரடி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவை, 1995ம் ஆண்டு முதல், குடிநீர் வடிகால் வாரிய கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டன.அதேபோல, உள்ளாட்சி நிர்வாகத்தில் பணியாற்றிய மேல்நிலைத் தொட்டி இயக்குனர்கள், மின் பணியாளர்கள், பொருத்துனர்கள் என, 1,500 பேர், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.அதையடுத்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதியம், 2000ம் ஆண்டு முதல் தொகுப்பூதியமாகவும், 2006 முதல் ஊதிய விகித சம்பளமாகவும் மாற்றி வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, குடிநீர் வடிகால் வாரியத்தில் தினக்கூலிகளாக வேலை செய்த, 1,500 தொழிலாளர்கள், 480 நாள் வேலை முடிந்த நாளில் இருந்து, 1996 ஆகஸ்ட் 8ம் தேதி, முத்தரப்பு ஒப்பந்தப்படி, முன் தேதியிட்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.இவர்கள் தவிர, மேலும், 500 நிரந்தரத் தொழிலாளர்கள் குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை செய்து வருவதால், தினக்கூலி தொழிலாளர்களை நியமிக்க, வாரியம் தடை செய்து விட்டது.
கடந்த 2010-11ம் ஆண்டு திட்ட மதிப்பீடு மற்றும் ஒப்பந்தப் பட்டியல்படி, தொழிலாளர்களின் மாதச் சம்பளம், தலா 3,500 - 5,500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தொழிலாளர்களுக்கு கொடுத்ததோ, வெறும் 750 - 2,500 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது.இவ்வாறாக, 2,000 தொழிலாளர்களுக்கு சம்பளத்தைச் சரி பாதியாகக் குறைத்துக் கொடுத்தது, 8,000 தொழிலாளர்கள் வேலையில் இருப்பதாக பொய்க் கணக்கு காட்டி, ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் வீதம், ஐந்தாண்டில் 200 கோடி ரூபாய் வரை குடிநீர் வடிகால் வாரியத்தில் மெகா ஊழல் நடந்துள்ளது.பொய்க் கணக்குப்படி, மொத்தமுள்ள, 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களில், ஐ.டி.ஐ., மற்றும் பட்டயப்படிப்பு கல்வித் தகுதி உள்ளவர்கள், 5,500 பேர்.இவர்கள், மின் பணியாளர், பொருத்துனர் மற்றும் மின் கண்காணிப்பாளர் பதவிகளில் இருக்க வேண்டும் என, திட்ட மதிப்பீடு, ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.தற்போது, வெறும், 200 பேர் மட்டுமே தொழில்நுட்பத் தகுதியுடன் பணியில் உள்ளனர். 5,300 பேரை ஐ.டி.ஐ., மற்றும் பட்டய கல்வித் தகுதி இருப்பதாகக் கூறி, மோசடியான ஒப்பந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு, சராசரியாக 4,000 முதல் 6,000 ரூபாய் வரை, மாதச் சம்பளமாக பட்டுவாடா செய்ததன் மூலம், ஆண்டுக்கு 27 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக, ஏ.ஐ.டி.யு.சி., தொழிலாளர் சம்மேளனம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், 'திட்ட மதிப்பீடுகள், ஒப்பந்தங்கள், ஒப்பந்தப் பட்டியல் நகல்களைக் கேட்டுப் பெற்றதில், 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது.இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முதல் குடிநீர் வடிகால் அரசுத் துறைச் செயலர் வரையில் புகார் அனுப்பியும், தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை இல்லை. இந்த ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்ட, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய ஏ.ஐ.டி.யூ.சி., முடிவு செய்துள்ளது.-நமது சிறப்பு நிருபர்-


