முத்தூட் நிறுவனத்தில் கைவரிசை காட்டிய 6 கொள்ளையர் கைது; மூவர் தலைமறைவு:1,381 சவரன் நகை மீட்பு
முத்தூட் நிறுவனத்தில் கைவரிசை காட்டிய 6 கொள்ளையர் கைது; மூவர் தலைமறைவு:1,381 சவரன் நகை மீட்பு
முத்தூட் நிறுவனத்தில் கைவரிசை காட்டிய 6 கொள்ளையர் கைது; மூவர் தலைமறைவு:1,381 சவரன் நகை மீட்பு
ADDED : அக் 05, 2011 12:16 AM

திருப்பூர்:திருப்பூரில் முத்தூட் மினி பைனான்ஸ் தங்க நகை அடகு நிறுவனத்தில், 1,381 சவரன் நகைகளை கொள்ளையடித்த ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன; தலைமறைவான மூன்று பேரை தேடி வருகின்றனர்.திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள கே.பி., டவரில், முத்தூட் மினி பைனான்ஸ் தங்க நகை அடகு நிறுவனம் செயல்படுகிறது. கடந்த செப்., 24ம் தேதி காலை 8.30 மணியளவில், இந்நிறுவனத்துக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஊழியர்களை கட்டிப் போட்டு, தாக்கினர். அங்கிருந்த லாக்கர் அறைக்குள் புகுந்து, 1,381 சவரன் நகை, 2.36 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அப்போது, முத்துசாமி வைத்திருந்த மொபைல் போனையும் பறித்துச் சென்றனர்.
கொள்ளை நடந்த 10 நாட்களில், கொள்ளையர்களில் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்த நகைகளையும், 45 ஆயிரம் ரூபாயையும் மீட்டனர். ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த ஷேக் அப்துல்லா, சேகர், தொப்பையார் வீதியைச் சேர்ந்த கார்த்திக், திருநெல்வேலி, திருகுறுங்குடியைச் சேர்ந்த சுமங்கலி பாண்டியன், குமார், மணிகண்டன் ஆகிய 6பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கருங்கல்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன், திருகுறுங்குடியை சேர்ந்த காளியப்பன், மணிவண்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.'காட்டிக் கொடுத்த' மொபைல் போன்: முத்தூட் மினி பைனான்ஸ் வியாபார தொடர்பாளர் முத்துசாமியின் மொபைல் போனை பறித்துச் சென்ற கொள்ளையர்கள், அதை ஈரோட்டில், கரூர் செல்லும் ரோட்டில், 'பகவதி கோச் பாடி பில்டர்ஸ்' என்ற பகுதியில் உள்ள கிணறு அருகே வீசினர். அவ்வழியாக வரும் லாரிகள், அப்பகுதியில் நின்று செல்வது வழக்கம். அவ்வாறு லாரி நிறுத்தப்பட்ட போது, கர்நாடகாவை சேர்ந்த லாரி டிரைவர் நாகராஜ், அந்த போனை எடுத்துள்ளார். தன் சிம்கார்டை போட்டு, போனை பயன்படுத்தியுள்ளார். ஐ.எம்.ஐ., எண் மூலம், மொபைல் போன் செயல்படுவதை தனிப்படை போலீசார் அறிந்தனர்.
மொபைல் போன் செயல்பாட்டை வைத்து, அதன் டவர் இருப்பிடத்தை கண்காணித்து அங்கு சென்ற போலீசார், நாகராஜை பிடித்து விசாரித்தனர். அவர், ஈரோட்டில் கிணற்றுக்கு அருகில், மரத்துக்கு கீழ் மொபைல் போனை கண்டெடுத்ததாக கூறியுள்ளார்.இதன்பின், ஈரோடு விரைந்த டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையிலான தனிப்படை போலீசார், சில நாட்களாக குறிப்பிட்ட அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பும், விசாரணையும் நடத்தினர்; வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.ஈரோடு - கரூர் ரோட்டில், டி.என் 33 ஏ.ஆர். 6610 என்ற பதிவு எண்ணில் வந்த, 'டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி' பைக்கை மறித்தனர். பைக்கை ஓட்டி வந்த ஷேக் அப்துல்லா, பின்னால் அமர்ந்து பயணித்த சேகர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது, முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் நகைகளை கொள்ளையடித்தவர்களில் இருவர் என தெரிந்தது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணைக்கு பின், கொள்ளையில் தொடர்புடைய கார்த்திக், சுமங்கலி பாண்டியன், குமார், மணிகண்டன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, பதுக்கி வைத்திருந்த நகைகளை மீட்டனர்.
பயிற்சி செய்து பார்த்த கொள்ளையர் : ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவன், இக்கொள்ளையில் 'மூளை'யாக செயல்பட்டவன். வெங்கடேசனும், திருகுறுங்குடியைச் சேர்ந்த மணிகண்டனும், சில ஆண்டுகளுக்கு முன், புதுக்கோட்டையில் 'டிப்ளமா' கோர்ஸ் படித்தபோது, நண்பர்களாகினர். இதில், வெங்கடேசன், ஈரோட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை நடத்தியவன். அங்கு அவனது பிளாஸ்டிக் குடோனும் உள்ளது. ஆறு மாதத்துக்கு முன், திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் செல்லும் ரோட்டில் உள்ள முத்தூட் நிறுவனத்தில், தற்காலிகமாக வெங்கடேசன் வேலை செய்துள்ளான்.
அப்போது, மற்ற முத்தூட் நிறுவனங்களுக்கும் சென்று வந்ததால், காங்கயம் ரோட்டில் உள்ள முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் எவ்வித பாதுகாப்பு வசதியும் இல்லாததை அறிந்தான்.வெங்கடேசன் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என ஒன்பது பேர் ஒன்றுகூடி பேசி, இக்கொள்ளையை நடத்த திட்டமிட்டனர். 3 மாதங்களுக்கு மேலாக, முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு, ஊழியர்கள் வருகை என, பல விஷயங்களையும் ரகசியமாய் கண்காணித்து, கடந்த 24ம் தேதி, திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டனர்.கொள்ளை நடந்த பின், பைக்கில் தப்பிய திருடர்கள், அங்கிருந்து சில கி.மீ., தூரம் சென்றதும், 'இண்டிகா' காரில் தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கும் நிகழ்ச்சியை, ஈரோட்டில் உள்ள வெங்கடேசனின் பிளாஸ்டிக் குடோனில், பலமுறை, 'பிராக்டீஸ்' செய்து பார்த்துவிட்டு, கொள்ளையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


