/உள்ளூர் செய்திகள்/திருச்சி/புதிய மாநகராட்சி கமிஷனர் அதிரடி நடவடிக்கையால் வருவாய் அதிகரிப்புபுதிய மாநகராட்சி கமிஷனர் அதிரடி நடவடிக்கையால் வருவாய் அதிகரிப்பு
புதிய மாநகராட்சி கமிஷனர் அதிரடி நடவடிக்கையால் வருவாய் அதிகரிப்பு
புதிய மாநகராட்சி கமிஷனர் அதிரடி நடவடிக்கையால் வருவாய் அதிகரிப்பு
புதிய மாநகராட்சி கமிஷனர் அதிரடி நடவடிக்கையால் வருவாய் அதிகரிப்பு
ADDED : செப் 06, 2011 12:02 AM
திருச்சி: திருச்சி மாநகராட்சி கமிஷனரின் அதிரடி நடவடிக்கையால், ஒரே மாதத்தில் 2.50 கோடி ரூபாய் வரி வசூலாகியுள்ளது.
இவரது நடவடிக்கையால் தூங்கி வழிந்த மாநகராட்சி நிர்வாகம் தற்போது சுறுசுறுப்பாக செயல்படத் துவங்கியுள்ளது. திருச்சி மாநகராட்சியில் வீட்டு வரி, தண்ணீர் வரி, சொத்துவரி, காலியிட வரி மற்றும் பல்வேறு இனங்களில் இருந்து வரியாக மட்டும், ஆண்டுக்கு 109 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வேண்டும். ஆனால், அரசியல் தலையீடு, வரி அதிகமாக இருப்பதாக கூறி மேல் முறையீடு செய்தல் போன்ற பல்வேறு காரணங்களால் முழுமையான வரி மாநகராட்சிக்கு வருவதில்லை. வரியை செலுத்த கோரி மாநகராட்சி என்னதான் கூறினாலும், ஏதோ வரி செலுத்த வேண்டுமே என்பதற்காக கொஞ்சம் தொகையை மட்டும் செலுத்துகின்றனர். மாநகராட்சிக்கு சேர வேண்டிய வரியை பொது மக்களிடம் இருந்து வசூல் செய்வதற்கு மாநகராட்சி பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. ஆட்டோக்கள் மூலம் பிரச்சாரம், நடமாடும் வாகனம் மூலம் பொது மக்களின் இருப்பிடத்திற்கே சென்று வரி வசூல் செய்தல், ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் ஆகிய கோட்டங்களில் வரிவசூல் செய்ய தனி மையம், மாநகராட்சி அலுவலகத்தில் வரி செலுத்த தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு வரி செலுத்துவோருக்கு அறிவிப்பு ஆணையும் (நோட்டீஸ்), அதை தொடர்ந்து நினைவூட்டும் கடிதமும் எழுதுகின்றனர். இவ்வளவு வசதிகள் செய்து கொடுத்தும், பொதுமக்களிடமிருந்து மாநகராட்சிக்கு வரிவசூல் செய்து, வருவாயை பெருக்கவும், அதிகரிக்கவும் முடியாமல் மாநகராட்சி அலுவலர்கள் படாத பாடுகின்றனர். இதனால் இதுநாள் வரை வசூலாகும் வரியை மட்டும் அலுவலர்கள் வசூலித்து வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி கமிஷனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரியான வீர ராகவ ராவ் ஆகஸ்ட் முதல் தேதியன்று பொறுப்பேற்றார். மாநகராட்சி வருவாய் குறித்தும், மக்களின் தண்ணீர் தேவை குறித்தும் அடுத்தடுத்து ஆய்வு கூட்டங்களை நடத்தினார். வருவாய் தேக்கத்திற்கு என்ன காரணம்? என ஆராய்ந்து சில நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்தினார். இதன் அடிப்படையில் மாநகராட்சிக்கு வரியினங்கள் அதிகரிக்க தொடங்கியது. இவர் பொறுப்பேற்ற ஒரு மாத காலத்தில் இரண்டரை கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இவர் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்பதற்கு முன் ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 65 சதவீதம், பொன்மலை 55, கோ.அபிஷேகபுரம் 75, அரியமங்கலம் 45 சதவீதம் மட்டுமே வரி வசூல் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஸ்ரீரங்கம் கோட்டம் 86 சதவீதமாகவும், பொன்மலை 75 சதவீதமாகவும், கோ.அபிஷேகபுரம் 91 சதவீதமும், அரிய மங்கலம் 60 சதவீதமும் வரி வசூலில் முன்னேற்றம் பெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக இதுவரை 81 சதவீதமாக வரி வசூல் அதிகரித்துள்ளது. மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் 2.50 கோடி ரூபாய் வரி வசூல் செய்துள்ளார். இதேவேகத்தில் வசூல் நடந்தால், நடப்பு நிதியாண்டில் திருச்சி மாநகராட்சி வரிவசூலில் சாதனை படைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதற்கு புதிய கமிஷனரின் அதிரடி வசூல் வியூகங்கள் தொடரவேண்டும் என்று மாநகராட்சி அலுவலர்கள் கூறுகின்றனர்.