Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/இட நெருக்கடியில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு வேறு இடம் தேட வேண்டிய கட்டாயம்

இட நெருக்கடியில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு வேறு இடம் தேட வேண்டிய கட்டாயம்

இட நெருக்கடியில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு வேறு இடம் தேட வேண்டிய கட்டாயம்

இட நெருக்கடியில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு வேறு இடம் தேட வேண்டிய கட்டாயம்

ADDED : ஆக 11, 2011 11:41 PM


Google News

ஈரோடு: இட நெருக்கடியால் தவிக்கும், ஈரோடு மாநகராட்சி குப்பைக் கிடங்குக்கு வேறு இடம் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி குப்பை மற்றும் உரக்கிடங்கு, வெண்டிபாளையத்தில் 17 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மாநகராட்சிப் பகுதியில் பல ஆண்டுகளாக சேர்ந்த 20 ஆயிரம் டன் குப்பை, 14 ஏக்கர் பரப்பளவில் மலைபோல குவிந்துள்ளது. இங்கு, நான்கு ஏக்கர் பரப்பளவில் ஐ.டபுள்யூ., எனும் நிறுவனம், 'கம்போஸ்ட்' உரம் தயாரிக்கிறது. ஈரோடு மாநகரிலுள்ள 45 வார்டுகளிலும் தினமும் 90 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி காசிபாளையம், சூரம்பட்டி நகராட்சிகளில் சேரும் தலா 15 டன் குப்பை சேர்த்து, தினமும் 120 டன் குப்பை கொட்டப்படுகிறது. 100 டன் குப்பையிலிருந்து, 30 டன் உரம் தயாரிக்க முடியும். எனினும், ஒரு நாளைக்கு 70 டன் குப்பை மட்டுமே உரமாகிறது. கண்ணாடி, இரும்பு, பிளாஸ்டிக் போன்றவை பிரிக்கப்பட்டு, மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை அழித்தால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்பதால், அவற்றை எதுவுமே செய்ய முடியாமல், மலையாக குவிந்துள்ளன. இன்றைய நிலவரப்படி குப்பைக்கிடங்கின் கொள்ளளவைவிட பல மடங்கு அதிகமாக குப்பை குவிந்துள்ளது. தொடர்ந்து, ஓவர் லோடாக நாள்தோறும் குப்பை கொட்டப்படுகிறது.



காசிபாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், சூரம்பட்டி ஆகிய நகராட்சிகள், சூரியம்பாளையம், பி.பி.அக்ரஹாரம் ஆகிய டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் ஐந்து பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணையவுள்ளன. வீரப்பன்சத்திரத்துக்கு மட்டுமே நிலையான குப்பைக்கிடங்கு உள்ளது. மாநகராட்சி எல்லை விரிவடைவதால், சேகரிக்கப்படும் குப்பை அளவு பல ஆயிரம் டன்னாக உயரும். இதனால், வெண்டிபாளையம் குப்பைக் கிடங்குக்கு மாற்று ஏற்பாடு செய்வது இன்றியமையாத ஒன்றாகியுள்ளது. புதிய குப்பை மற்றும் உரக்கிடங்கு அமைக்க குறைந்தபட்சம் 30 முதல் 50 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் தேவை. அந்தளவுக்கு நிலம் ஈரோடு புறநகர் பகுதியில் இல்லை. விரிவடைந்து வரும் குடியிருப்புகளால், எங்கு குப்பை கொட்டினாலும் எதிர்ப்பு வலுக்கும். எனவே, இங்கு குப்பையை அழித்திடும் வகையில் சிறப்பான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு மாநகர மக்கள் ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us