ADDED : ஆக 26, 2011 11:26 PM
சிவகங்கை : அரசு நிலங்களில் வளரும் மரங்களை கள்ளத்தனமாக வெட்ட, பச்சையாக இருக்கும் போதே தீ வைத்து வெட்டும் கும்பலை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும்.வறட்சிக்கு இலக்காகும் பகுதி மேம்பாட்டு திட்டம்,பசுமைக்காடுகள் திட்டம், தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டம், தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்டவைகளின் மூலம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
குறிப்பாக புறம்போக்கு நிலங்கள், ஆற்றுப்படுகை, கண்மாய்களில் மரக்கன்றுகள் சமூக காடுகள் வளர்ப்பு துறையினர் மூலம் பல ஜாதி மரங்கள் வளர்க்கப்படுகின்றன.இங்கு வளர்க்கப்படும் மரங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.தீ வைப்பு: மாவட்டம் முழுவதும் புளி, வேம்பு, தேக்கு, சவுக்கு, புங்கம், வில்வம் உள்ளிட்ட பல ஜாதி மரங்கள் நட அரசு பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்குகிறது. இந்த மரங்களை குறிப்பிட்ட காலங்கள் வரை வெட்ட அனுமதி கிடையாது. மரங்களின் வயது மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் வெட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கும்.டெண்டர் விடப்பட்ட மரங்கள் மட்டுமே வெட்ட அனுமதி வழங்கப்படும். இந்த மரங்களை நட்ட பின் பாதுகாப்பிற்கு பிரத்யேக பணியாளர்கள் இல்லை. இதனால் இவற்றை கள்ளத்தனமாக திருடுபவர்கள் பச்சை மரமாக இருந்தாலும் மரத்திற்கு அடிப்பகுதியில் தீவைத்து கருகிய பின்னர் வெட்டி விறகு, கரி மூட்டத்திற்கு பயன்படுத்துகின்றனர். மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' மாவட்டத்தில் வனத்துறையின் கீழ் வளர்க்கப்படும் மரங்கள், சமூக காடுகள் திட்டத்தின் வளர்க்கப்படும் மரங்களை வெட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்


