வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வருகை:தொழிற்துறை வல்லுனர்களுடன் கலந்துரையாடல்
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வருகை:தொழிற்துறை வல்லுனர்களுடன் கலந்துரையாடல்
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வருகை:தொழிற்துறை வல்லுனர்களுடன் கலந்துரையாடல்
சென்னை:''சவாலை சமாளிக்கும் திறன், தலைமைப் பண்பு, கலாசார ஒழுக்கம் ஆகியவை இருந்தால், தொழிலில் சாதிக்க முடியும்,'' என, அசோக் லேலண்ட் இயக்குனர் அம்ரோலியா தெரிவித்தார்.இந்தோனேஷியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட, 10 ஆசிய நாடுகளைச் சேர்ந்த, கல்லூரி மாணவர்கள், இந்திய கலாசாரத்தை அறிந்து கொள்வதற்காக, இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளனர்.இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த, தொழில்துறை வல்லுனர்கள் பங்கு கொண்ட கலந்துரையாடல் கூட்டத்தில், மாணவர்கள் நேற்று கலந்து கொண்டனர்.
இதில், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இயக்குனர் அம்ரோலியா பேசியதாவது:ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியா வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
பல நாடுகளின் பழக்க, வழக்கங்களை கற்றுணர்ந்த அவர்கள், சிறந்த தொழில் முனைவோர்களாக உருவெடுக்கின்றனர். சவாலை சமாளிக்கும் திறன், தலைமைப் பண்பு, கலாசார ஒழுக்கம் ஆகியவை இருந்தால், தொழிலில் சாதிக்க முடியும். தொழிலையும், எவ்வித பிரச்னையும் இல்லாமல், நீண்ட காலத்திற்கு சிறப்பாக நடத்த முடியும்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல முன்னாள் தலைவர் பிரதிப்தா மொகபாத்ரா பேசும்போது, 'உலகமயமாக்கல் கொள்கைக்கு பிறகு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. பல வெளிநாட்டு நிறுவனங்களை, இந்திய நிறுவனங்கள் கையகப்படுத்துவது பெருமையாக உள்ளது' என்றார்.


