Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பாஜியோ கார் தொழிற்சாலை குஜராத் மாநிலத்திற்கு சென்றது

பாஜியோ கார் தொழிற்சாலை குஜராத் மாநிலத்திற்கு சென்றது

பாஜியோ கார் தொழிற்சாலை குஜராத் மாநிலத்திற்கு சென்றது

பாஜியோ கார் தொழிற்சாலை குஜராத் மாநிலத்திற்கு சென்றது

UPDATED : செப் 02, 2011 12:33 AMADDED : செப் 01, 2011 11:47 PM


Google News
Latest Tamil News
ஆமதாபாத்: பிரான்சின் பி.எஸ்.ஏ பாஜியோ சிட்ரான் நிறுவனம், குஜராத்தில் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் கார் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது.

சென்னைக்கு அருகில், கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டிருந்த இந்நிறுவனத்தின் திடீர் மனமாற்றம், தமிழக அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இரு மாதங்களுக்கு முன்பு, பாஜியோ சிட்ரான் நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழு, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, சென்னையில் கார் தொழிற்சாலை அமைப்பது குறித்து, பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, கார் தொழிற்சாலை அமைப்பதற்கான நில ஒதுக்கீடு உள்ளிட்ட, அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க தயாராக உள்ளதாக முதல்வர் தெரிவித்தார். இதையடுத்து, சென்னை அருகே கார் தொழிற்சாலை அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக முதல்வரை சந்தித்த மறுநாளே, இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து, அம்மாநிலத்தில் கார் தொழிற்சாலை அமைப்பது குறித்தும், பேச்சுவார்த்தை நடத்தியது.



இது தொடர்பாக, இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கார் தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த இரு மாதங்களாக, பாஜியோ கார் தொழிற்சாலை, எங்கு அமையும் என்பது புரியாத புதிராக இருந்தது. இந்நிலையில், இந்நிறுவனம், குஜராத்தின் சனந்த் தொழிற்பேட்டையில் அதன் கார் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது.



இது தொடர்பாக, குஜராத் அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகையில், தமிழகத்தின் வாய்ப்பை, குஜராத் அரசு தட்டிப் பறித்து விட்டதாக, இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். சனந்தில் ஏற்கனவே டாட்டா நிறுவனம் அதன் 'நானோ' கார் தொழிற்சாலையை அமைத்துள்ளது. போர்டு மோட்டார்ஸ் நிறுவனமும், 5,000 கோடி ரூபாய் முதலீட்டில், அங்கு கார் தொழிற்சாலை அமைக்க உள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us