/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கல்லூரியில் ராகிங் தடுக்க கண்காணிப்பு குழுகல்லூரியில் ராகிங் தடுக்க கண்காணிப்பு குழு
கல்லூரியில் ராகிங் தடுக்க கண்காணிப்பு குழு
கல்லூரியில் ராகிங் தடுக்க கண்காணிப்பு குழு
கல்லூரியில் ராகிங் தடுக்க கண்காணிப்பு குழு
ADDED : ஆக 26, 2011 01:06 AM
கிருஷ்ணகிரி: ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், ராகிங் நடப்பதை தடுக்க, 'ஆண்டி ராகிங் கமிட்டி' அமைக்கப்பட்டுள்ளது,'' என்று எஸ்.பி., கண்ணன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் ராகிங் நடப்பதை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்தது. எஸ்.பி., கண்ணன் தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார், ஏ.எஸ்.பி., ரம்யபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 24 கல்லூரிகளை சேர்ந்த கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின், எஸ்.பி., கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய அளவில், ஈவ் டீசிங் காரணமாக கடந்த 1998ல் ஒரு மரணம் ஏற்பட்டது. 2004 மற்றும் 2005ல் இது நான்காக அதிகரித்தது. 2010ல் இது 6 ஆக அதிகரித்துள்ளது. எனவே, தமிழகத்தில் ஈவ் டீசிங் மற்றும் ராகிங்கை தடுக்க, தனியாக சட்டம் உருவாக்கப்பட்டது. கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க, அரசு மற்றும் போலீஸ் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 24 கல்லூரிகளிலும், 'ஆண்டி ராகிங் கமிட்டி' அமைக்கப்பட்டுள்ளது. இதில், அந்தந்த பகுதி ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி., கல்லூரி முதல்வர், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் இருவர், சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்கள், மீடியாவை சேர்ந்தவர்கள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், பெற்றோர்கள் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கமிட்டி கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கும், ஏற்கெனவே படிக்கும் சீனியார் மாணவர்களுக்கும் நட்புறவை வளர்க்கும் பாலமாக இருப்பார்கள். அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் குறித்தும், ராகிங்கில் ஈடுபட்டால் அதற்குரிய தண்டனைகள் குறித்தும் விளக்கப்பட்ட ஃப்ளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மற்றும் கல்லூரி விடுதிகளில் ராகிங் நடந்தால், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி மற்றும் வெப்சைட் முகவரி தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் ராகிங் மற்றும் ஈவ்டீசிங் நடந்தாலும், 1800-1805522 என்ற டோல்பிரி நம்பரில் தகவல் தெரிவித்தால், போலீஸார் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பர். கல்லூரிகளில் ராகிங் நடந்தால், இது குறித்த தகவலை கல்லூரி முதல்வர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிக்காமல் அவர்களே சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்தால், கல்லூரி முதல்வரும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்படுவார். கல்லூரி முதல்வர்கள் தகவல் தந்து 24 மணி நேரத்தில் எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும். ஆண்டுதோறும் கல்லூரி திறக்கும் முன், சீனியர் மாணவர்களுக்கும், கல்லூரி துவங்கியவுடன் ஜூனியர் மாணவர்களுக்கும் ராகிங் குறித்த விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும். கல்லூரி சார்பில், மாணவர்களுக்கு வழங்கப்படும் கையேட்டில் ராகிங் கமிட்டி குறித்த விபரங்களையும், அவர்கள் மொபைல்ஃபோன் எண்களையும் அச்சடித்து வழங்க வேண்டும். புதியதாக கல்லூரியில் சேரும் மாணவர்களிடத்தில், 'ராகிங் செய்ய மாட்டேன்' என்ற உறுதிமொழியை கல்லூரி நிர்வாகம் எழுதி வாங்க வேண்டும். ராகிங்கை தடுக்க, முதலாண்டு மாணவர்களுக்கு தனியாக விடுதி வசதி செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு ராகிங் வழக்கு கூட பதிவாகவில்லை. இவ்வாறு எஸ்.பி., கூறினார்.
டி.எஸ்.பி.,க்கள் ரவிக்குமார், உமாகேஸ்வரன், காசிவிஸ்வநாதன், சுஹாசினி, ஆறுமுகம், மாவட்ட தனிப்பிரிவு எஸ்.ஐ., முத்தமிழ் செல்வராசு மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.