நடன சிகிச்சை
இசையை சிகிச்சைக்கெனப் பயன்படுத்துவது போல, நடனத்தையும் மருத்துவத்திற்கெனப் பயன்படுத்துவது, நடன சிகிச்சையாகும்.இந்த நடன சிகிச்சை, உளவியல் சிகிச்சையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் நடன சிகிச்சை பிரபலமானதாகும். அந்த சிகிச்சை தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. இந்த ஆடல் சிகிச்சையில் எப்படி நடனமாடுகின்றனர் என்பதை விட, எப்படி வெளிப்படுத்துகின்றனர் என்பதே முக்கியமாக கண்காணிக்கப்படுகிறது.நடனக் கலையில் நடனமாடுபவர்கள், பிறரது மகிழ்ச்சிக்காக ஆடுவர். நடன சிகிச்சையில் நடனமாடுபவர், தமது நலத்திற்கும் வளத்திற்கும் ஆடுகின்றார். இந்தியாவில் மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றாக, தற்போது ஆடல் சிகிச்சை பிரபலமாகி வருகிறது.
தகவல் சுரங்கம்
பொம்மைகளின் மாநிலம்:வரவிருக்கின்ற தசராவுக்காக, இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் தான் அதிகமான பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன.நவராத்திரி, தசரா, கொலு என வெவ்வேறு பெயர்களில் இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகை, ஆந்திர கைவினைக் கலைஞர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகளைத் தருகிறது. சீனாவில் இருந்து நிறைய பொம்மைகள் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப் பட்டாலும், பாரம்பரிய பண்டிகைகளில் கையினால் செய்யப்பட்ட பொம்மைகளையே பயன்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கை, நல்ல வேலை வாய்ப்புகளைத் தருகிறது.
ஆந்திராவில் தயாராகும் திருப்பதி பொம்மைகள், இந்தியா முழுவதும் நவராத்திரிக்காக செல்கின்றன. திருச்சானூரில் சிவப்பு சந்தனக் கட்டைகளால் செய்யப்படும் இந்த பொம்மைகள் 'திருப்பதி பொம்மைகள்' என அழைக்கப்படுகின்றன. ஆந்திராவில் கொண்டபள்ளி கிராம மக்களால் செய்யப்படும் மரத்தாலான எளிய பொம்மைகள் 'கொண்டபள்ளி பொம்மைகள்' என்ற பெயரில் புவியியல் குறியீட்டு எண்ணைப் பெற்றுள்ளன.