ADDED : செப் 27, 2011 11:50 PM
புதுச்சேரி : ஆள் கடத்தலைத் தடுப்பது குறித்து, போலீசாருக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை நேற்று நிறைவடைந்தது.
ஆள் கடத்தலைத் தடுத்தல், அதனால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து போலீசாருக்கும், பிற துறையினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உள்துறை அமைச்சக அறிவுறுத்தல்படி, இரண்டு நாள் பயிற்சிப் பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.பயிற்சிப் பட்டறை, புதுச்சேரி பல்கலைக்கழக கருத்தரங்க வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.சீனியர் எஸ்.பி., பிரதீப் சந்திர ஹோட்டா தலைமை தாங்கினார். டி.ஐ.ஜி., அதுல்கத்தியார் வரவேற்றார். டில்லி போலீஸ் துறை கூடுதல் இயக்குனர் நாயர், ஐ.பி.எஸ்., அதிகாரி சுனிதா கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.பயிற்சிப் பட்டறையில், போலீஸ் அதிகாரிகள், தொழிலாளர் துறை, நலவழித்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சட்டம் மற்றும் நீதித் துறை, அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வழக்கு தொடருதல், பாதிப்படைந்த நபர்களை மீட்டல், மனதை அறிதல் மற்றும் பழைய நிலையை அடையச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிப் பட்டறை, நேற்று மாலை நிறைவடைந்தது. பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு, சீனியர் எஸ்.பி., பிரதீப் சந்திர ஹோட்டா சான்றிதழ் வழங்கினார்.