PUBLISHED ON : செப் 01, 2011 12:00 AM

தி.மு.க., மத்திய அமைச்சர் அழகிரி: அ.தி.மு.க., அரசு நூறு நாள் சாதனையைக் கடந்துவிட்டதாகக் கூறுகின்றனர். 150வது நாளில், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த பட்டியல் வெளியிட்டு, சாதனையாகக் கொண்டாடுவர். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்த நிலைமை மாறும்.
டவுட் தனபாலு: தி.மு.க., ஆட்சியில இருந்தபோது, நில அபகரிப்பு புகார்களை ஏற்கனவே மறுத்து, அவங்களுக்கு உடந்தையா இருந்தீங்கன்றதால தானே, உங்களை தோற்கடிச்சுட்டு மக்கள், அ.தி.மு.க.,வை ஜெயிக்க வைச்சாங்க... திரும்ப வந்தீங்கன்னா, இந்த நிலைமை மாறும்னு சொல்லிட்டீங்க... அப்போ, உங்களை வரவிடாம தடுக்கறதுக்கு என்ன செய்யணும்னு மக்களுக்கும் தெரியாதாங்கறது தான், என்னோட, 'டவுட்!'
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன்: அறநிலையத் துறையில் உள்ள, 1,586 கோவில்களுக்குச் சொந்தமான, 1,068 கோவில் குளங்களை சீரமைத்து, மழைநீர் சேமிப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்.
டவுட் தனபாலு: முதல்ல, கோவில்களுக்குச் சொந்தமான குளங்களை மீட்கிறதுக்கான வழிகளைப் பாருங்க... அப்புறம், அதுல மழைநீர் சேகரிக்கிறதைப் பத்தி யோசிக்கலாம்... 'அறங்காவலர்'களும், அவங்க கூட்டாளிகளும் சேர்த்து, இருந்த குளத்தை எல்லாம் ஏற்கனவே, 'பிளாட்' போட்டு வித்து முடிச்சுட்டாங்க...!
பத்திரிகைச் செய்தி: 12 நாள் உண்ணாவிரதத்துக்குப் பின்னர், டில்லி புறநகரான குர்காவ்னில் உள்ள தனியார் மருத்துவமனையில், அன்னா ஹசாரே சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி, பிரதமர் மன்மோகன் சிங், 'பொக்கே' ஒன்றை அனுப்பியுள்ளார்.
டவுட் தனபாலு: அவர் ஏதாவது நையாண்டி பண்ணியிருக்கப் போறாருங்க... 'எங்களை நம்பி போராட்டத்தைக் கைவிட்டிருக்கியே... உன்னை நினைச்சாலே சிரிப்பு சிரிப்பா வருது'ன்னு சொல்லியிருப்பாரு... எதுக்கும் அவர் அனுப்பினதை நல்லா பாருங்க; அது, 'பொக்கே'வா... இல்ல, 'பெப்பே'வான்னு!
தமிழக முதல்வர் ஜெயலலிதா: முந்தைய தி.மு.க., அரசால் துவங்கப்பட்ட அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், அந்த அரசாலேயே முடக்கப்பட்டது.
டவுட் தனபாலு: 'அரசு கேபிள் நிறுவனம் என்பதால், அடக்கமாக செயல்படுகிறது'ன்னு அவர் தான் சொன்னாரு... அதே மாதிரி அடக்கம் பண்ணிட்டாரு...! சொன்னதைச் செய்வோம்; செய்ததைத் தான் சொல்வோம்னு அவர் சொல்லி நீங்க கேட்டதில்லையாங்கறது தான் என்னோட 'டவுட்!'
மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்: ஒரு பிரச்னை குறித்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றால், அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதே வேளையில், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், யாரையும் கட்டுப்படுத்தாது.
டவுட் தனபாலு: சுத்தம்... ஏங்க நீங்க வேற... ஏற்கனவே அதுல நிறைவேத்துற தீர்மானத்தை எந்த அரசியல் கட்சியும் மதிக்கிறதில்லை... நீங்க பாட்டுக்கு, 'இது யாரையும் கட்டுப்படுத்தாது'ன்னு வேற போட்டுக்கொடுத்துட்டீங்கன்னா, உள்ளதும் போயிடும்...!
ராஜிவ் கொலையாளி முருகனின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி: மனுதாரர் முருகன், 20 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவரது கருணை மனு, 11 ஆண்டுகள் நான்கு மாதம் காலதாமதம் செய்து நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு மனுதாரருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால், அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது; நியாயமற்றது.
டவுட் தனபாலு: அடேயப்பா... ரொம்ப வலுவான வாதமா இருக்கே... இதே 11 வருஷம் தாமதத்துல, 'உங்கள் கருணை மனுக்கள் ஏற்கப்பட்டு, விடுவிக்கப்படுகிறீர்கள்'னு ஜனாதிபதி உத்தரவு பிறப்பிச்சிருந்தாங்கன்னா, இப்போ மாதிரியே, 'இவ்ளோ தாமதமான உத்தரவு நியாயமற்றது'ன்னு சொல்லுவீங்களா...?