Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பார்லியின் இரு சபைகளிலும் ரகளை : சுரேஷ் கல்மாடியை நியமித்தது யார்?

பார்லியின் இரு சபைகளிலும் ரகளை : சுரேஷ் கல்மாடியை நியமித்தது யார்?

பார்லியின் இரு சபைகளிலும் ரகளை : சுரேஷ் கல்மாடியை நியமித்தது யார்?

பார்லியின் இரு சபைகளிலும் ரகளை : சுரேஷ் கல்மாடியை நியமித்தது யார்?

ADDED : ஆக 08, 2011 11:49 PM


Google News
Latest Tamil News

காமன்வெல்த் போட்டிகள் தொடர்பான சி.ஏ.ஜி., அறிக்கையால், பார்லிமென்டின் இரு சபைகளிலும், நேற்று, டும் அமளி ஏற்பட்டு, நாள் முழுவதும் சபைகள் ஒத்திவைக்கப்பட்டன.

டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை நீக்க வேண்டுமென, எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டன. சுரேஷ் கல்மாடியை நியமனம் செய்தது யார் என்ற சர்ச்சையில் காங்கிரசும், பா.ஜ.,வும் கடுமையாக மோதிக் கொண்டன.



காமன்வெல்த் போட்டி ஊழல் குறித்து, மத்திய கணக்கு தணிக்கை ஆணையம் சார்பில், கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மற்றும் பிரதமர் அலுவலகம் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. நேற்று, பார்லிமென்ட் துவங்கியதும், இப்பிரச்னை பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தியது.

லோக்சபாவில் கேள்வி நேரம் துவங்கிய சில நொடிகளில், பா.ஜ., - கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் எம்.பி.,க்கள், கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் என, போர்க்குரல் எழுப்பவே, சபையே அமளிக்காடானது. 'டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், இனியும், ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, கோஷங்கள் எழுப்பினர். பிரதமர் அலுவலகம் குறித்தும் கோஷங்கள் கிளம்பின. அத்துடன், சுரேஷ் கல்மாடியின் நியமனம் குறித்த சர்ச்சையும், நேற்று, சபையை பரபரப்புக்கு உள்ளாக்கியது. 'காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் குழுவின் தலைவராக, கல்மாடியை நியமனம் செய்தது, கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசே' என, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மக்கான், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், கடந்த வாரம் கூறியிருந்தார்.



இந்திய ஒலிம்பிக் சங்கம் தான் காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கு உண்டான ஒப்பந்தத்தை பெற்று, அதனடிப்படையில், போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவராக சுரேஷ் கல்மாடி தேர்வு செய்யப்பட்டார். அவரை தேர்வு செய்த குழுவில், பா.ஜ.,வைச் சேர்ந்த மல்கோத்ரா உள்ளிட்டோர் இருந்தனர். எனவே, சுரேஷ் கல்மாடியின் நியமனம் என்பது, தே.ஜ., கூட்டணி அரசையே சாரும் என்று பொருள்பட அமைச்சர் மக்கான் தெரிவித்திருந்தார். ஆனால், சி.ஏ.ஜி., அறிக்கையில், பிரதமர் அலுவலக பரிந்துரையின் பேரில் தான், போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவராக சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டார் என கூறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அமைச்சரின் தகவல் தவறானது என, பா.ஜ., எம்.பி..,க்கள் முழுவீச்சில் குரல் எழுப்பினர்.



பார்லிமென்டின் இரு சபைகளுக்கும் தவறான தகவலை தந்த அமைச்சர் அஜய் மக்கான் மீது, உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரவும் பா.ஜ., திட்டமிட்டது. அந்த கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த்சின்கா சார்பில், இதற்கான நோட்டீஸ், லோக்சபா சபாநாயகர் மீராகுமாரிடம் வழங்கப்பட்டது. அதேபோல, ராஜ்யசபாவிலும், மூத்த தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா சார்பில், சபைத் தலைவர் அமீது அன்சாரியிடமும் வழங்கப்பட்டது. இந்த உரிமை மீறல் தீர்மானத்தை ஏற்க வேண்டுமென, அமளியின்போது பா.ஜ., தரப்பில், லோக்சபாவில் வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், கடும் கூச்சலும், குழப்பமும் சபையில் நிலவவே, கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது. சபையை, மதியம், 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். பின்னர் கூடியபோதும், இதே நிலை நீடிக்கவே, வேறு வழியின்றி, நாள் முழுவதும் சபை ஒத்திவைக்கப்பட்டது.



ராஜ்யசபாவிலும் கேள்வி நேரம் துவங்கிய மறு கணமே, பா.ஜ., எம்.பி.,க்கள் கடும் ரகளையில் இறங்கினர். டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது, சி.ஏ.ஜி., அறிக்கையில் கடும் குற்றச்சாட்டு கூறப்பட்டிருப்பதால், அவர் பதவியில் நீடிக்கக் கூடாது என வலியுறுத்தி, கோஷங்கள் கிளம்பின. சபைத் தலைவர் இருக்கையை நோக்கி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அனைவரும் ஒன்றாக கூட ஆரம்பித்தனர். இடதுசாரி மற்றும் சமாஜ்வாடி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களும் கடுமையான கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கவே, சபையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலை காணப்பட்டது. பின்னர் வேறு வழியின்றி சபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோதும் ரகளை தொடரவே, நாள் முழுவதற்கும் சபை ஒத்திவைக்கப்படுவதாக, துணைத் தலைவர் ரகுமான்கான் அறிவித்தார். இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்ட பின், பார்லிக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மக்கான், ''நான், ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை அன்று அறிக்கை மூலம் சபையில் கூறியிருந்த கருத்துக்களில் உறுதியாக உள்ளேன். தவறாக எதையும் கூறவில்லை. ''தானாக முன்வந்து தாக்கல் செய்த அறிக்கையை வாசித்து முடித்தவுடன், அதுகுறித்து கேள்விகளை எதிர்க்கட்சியினர் எழுப்புவதும், அதற்கு அமைச்சர் பதில் அளிப்பதும் வழக்கம். ஆனால், அன்றைய தினம் திரும்ப திரும்ப நான் கேட்டும், தற்போது எதுவும் கேட்க விரும்பவில்லை என மூத்த தலைவர் அலுவாலியா கூட கூறினார். ''அப்போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது பிரச்னையை கிளப்புகின்றனர். எந்த கேள்விகளுக்கும் நான் பதில் அளிக்க தயாராகவே இருக்கிறேன். அதை விரும்பாமல், எதிர்க்கட்சியினர் ரகளையில் இறங்குவது துரதிருஷ்டவசமானது,'' என்றார்.



கருத்து கூற ஷீலா மறுப்பு : காமன்வெல்த் போட்டி தொடர்பான சி.ஏ.ஜி., அறிக்கையில், கடும் விமர்சனதிற்கு உள்ளாகியுள்ளவர் ஷீலா தீட்சித். பார்லிமென்டில் நேற்று இவரையும், அமைச்சர் அஜய் மக்கானையும் மையமாக வைத்து, ரகளை நடைபெற்றது. இதுபற்றி ஷீலா தீட்சித்திடம் கேட்டபோது, அவர் கருத்துக் கூற மறுத்து விட்டார். இருப்பினும், எதிர்க்கட்சியினர் ரகளை, இன்றும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ., சார்பில், அமைச்சர் அஜய் மக்கான் மீது அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டு விட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவும், இனி வரும் நாட்களில், அரசு தரப்புக்கு நெருக்கடியை அளிக்க, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. விலைவாசி பிரச்னையால், கடந்த வாரம் பாதிக்கப்பட்ட பார்லிமென்ட், காமன்வெல்த்போட்டி ஊழலுக்காக, அநேகமாக இந்த வாரம் முழுக்கவே பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.





ஷீலாவுக்கு காங்கிரஸ் வக்காலத்து : 'மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்பதற்காக, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என, காங்கிரஸ் தெரிவித்துள்ளது.



காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் நிருபம் கூறியதாவது: ஷீலா தீட்சித், பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கணக்கு தணிக்கை அறிக்கையில், ஷீலா தீட்சித்துக்கு எதிராக, எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை. ஷீலா தீட்சித் ராஜினாமா செய்ய வேண்டுமானால், பீகார் மற்றும் உ.பி., மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கு தணிக்கை அறிக்கைகளில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், உ.பி., முதல்வர் மாயாவதி போன்றோர் மீதும், குற்றம்சாட்டப்பட்டுள்ளதே. அவர்களும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை. இவ்வாறு சஞ்சய் நிருபம் கூறினார். பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறுகையில், ''மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையின், பிரதான அறிக்கையில், ஷீலா தீட்சித்துக்கு எதிராக, எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை. அதன் இணைப்பில் தான், சில வரிகள் இடம் பெற்றுள் ளன. இதை அறிந்து கொள்ளாமல், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பார்லிமென்டில் அமளியை ஏற்படுத்துகின்றனர்', என்றார். சல்மான் குர்ஷித் கூறுகையில், ''காமன்வெல்த் போட்டிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, பொதுக்கணக்கு குழு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பார்த்த பின்தான், இதுகுறித்து அரசு சார்பில் பதில் அளிக்கப்படும்', என்றார்.



நமது டில்லி நிருபர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us