Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ராமாயண காலத்து ஆய்வு: அப்துல் கலாம் வரவேற்பு

ராமாயண காலத்து ஆய்வு: அப்துல் கலாம் வரவேற்பு

ராமாயண காலத்து ஆய்வு: அப்துல் கலாம் வரவேற்பு

ராமாயண காலத்து ஆய்வு: அப்துல் கலாம் வரவேற்பு

ADDED : ஆக 01, 2011 11:30 PM


Google News
Latest Tamil News

புதுடில்லி: ''ராமாயண காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் ராமர் தொடர்புடைய இடங்களை, ஆய்வுகள் மூலம் அறிவியல்பூர்வமாக நிரூபித்தால் அது சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும்,'' என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.



கி.மு., 2000ம் ஆண்டுக்கு முந்தைய புராதன இந்தியாவில் நடந்த சம்பவங்களை அறிவியல்பூர்வமாக வரிசைப்படுத்துவது பற்றிய கருத்தரங்கம் டில்லியில் நேற்று நடந்தது.

இதில், விஞ்ஞானிகள், வரலாற்று ஆய்வாளர்கள், வேத பண்டிதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று புராதன இந்தியா பற்றிய தாங்கள் கண்டறிந்தவை பற்றி உரையாற்றினர். இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது: எந்த அன்னிய நாட்டின் தாக்கமும் இல்லாத இந்திய நாகரிகத்தின் தனித்தன்மையை நிரூபிப்பதற்கான முயற்சிகள், நாட்டின் நம்பிக்கைக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுக்கும். ராமாயண காலத்தில் நடந்த சம்பவங்கள் மற்றும் ராமர் தொடர்புடைய இடங்களை, ஆய்வுகள் மூலம் அறிவியல்பூர்வமாக நிரூபித்தால் அது சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும். ராமாயண இதிகாசத்துடன் நெருங்கிய தொடர்புடைய ராமேஸ்வரத்தில் பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு இது போன்ற முயற்சிகள் மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றன. ராமேஸ்வரத்தின் அனைத்துப் பகுதிகளும் அது பற்றிய விஷயங்களும் எனக்குத் தெரியும்.



நான் ராமேஸ்வரத்தில் சிறு வயதில் வீடு வீடாகச் சென்று நாளிதழ்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டேன். காந்தமன பர்வதத்தின் மீது ஏறி ராமர், இலங்கையைப் பார்த்தார். அது என் கண்களில் தெரிகிறது. என் மனக்கண் முன் இப்போது ராமேஸ்வரத்தின் பிரபலமான கோதண்ட ராமர் கோவில் தெரிகிறது. மத்தியப் புள்ளியாக ராமநாத ஸ்வாமி தோன்றுகிறது. அதில் ராமர் வழிபட்ட லிங்கத்தைக் காண்கிறோம். ராமாயண நிகழ்ச்சிகள் நடைபெற்ற காலகட்டத்தை அறிவியல்பூர்வமாகக் கணக்கிடுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. ராமர், லட்சுணன், ஹனுமான், சுக்ரீவன் மற்றும் வானரப் படைகள், இலங்கை மீது போர் தொடுப்பதற்கு முன் எந்தெந்த இடங்களில் படைத் தளங்களை அமைத்தனர் என்பது விஞ்ஞானபூர்வமாகக் கண்டறியப்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.



வேத காலத்தில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான விவசாய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. அவை இந்தக் காலத்துக்கு ஏராளமான பாடங்களை போதிக்கின்றன. வேத கால உழவர்கள் தங்கள் விவசாயத்துக்கு இயற்கை உரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள், 12 வகையான மண் வகைகளைக் கண்டறிந்துள்ளனர். மண் வகைக்கேற்ப உரங்களைப் பயன்படுத்துவதை அவர்கள் முறையாகக் கொண்டிருந்தனர். அவர்கள் விவசாயத்துறையில் பூச்சிக்கொல்லி மருந்துகளையோ, விஷத்தன்மை வாய்ந்த பொருட்களையோ பயன்படுத்தவில்லை. அவர்களின் அனுபவத்தில் இருந்து நாம் கற்க வேண்டியது ஏராளம். வேத கால மற்றும் வேத காலத்துக்குப் பிந்தைய இலக்கியத்தில் விஞ்ஞானபூர்வமான அறிவு கொட்டிக் கிடக்கிறது. அது மனித குலத்துக்கு மிகவும் பயன்தரக் கூடியதாகும். புராண காலத்து சம்பவங்களை ஆண்டுரீதியாக வரிசைப்படுத்துவதன் மூலம் அவை வரலாறாக மாறும்.



ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, அதில் அந்த காலத்து கிரஹங்களின் பல்வேறு நிலைகள், ராமாயணத்தில் குறிப்பிடப்படும் இடங்கள் பற்றிய புவியியல், பல்வேறு மன்னர்களின் பரம்பரைகள் போன்ற பல்வேறு தகவல்களை அளித்துள்ளார். இந்தியாவின் இதிகாசங்கள் பற்றிய தேடலில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் குறைந்தது 100 பி.ஹெச்டி., பட்டங்களுக்கான ஆய்வைத் துவக்க வேண்டும். ராமாயண காலத்துச் சம்பவங்களின் உண்மைத்தன்மை மற்றும் வருடங்களை உறுதிப்படுத்த வரலாற்று ஆய்வாளர்கள், மண்ணியல், வானியல், விண்வெளி விஞ்ஞானிகளும் முயற்சிக்க வேண்டும்.



சில நவீன சாஃப்ட்வேர்களைக் கொண்டு வானியல் ரீதியாகக் கணக்கிட்டபோது, ராமாயணத்தில் வரும் சம்பவங்கள் சுமார், 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று தெரிய வந்தது. ராமசேது எனப்படும் ராமர் பாலத்தைப் பொறுத்த வரை, இலங்கைக்குச் செல்வதற்காக ராமர் அதைப் பயன்படுத்தினார். அப்பாலம் அதே இடத்தில் கடல்நீரில் மூழ்கிவிட்டதாக வால்மீகியே எழுதியுள்ளார். சில மதிப்பீடுகளின்படி, கடந்த 7 ஆயிரம் ஆண்டுகளில் கடல் மட்டத்தில் ஒன்பது அடி அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. அதே ஒன்பது அடி ஆழத்தில்தான் ராமர் பாலத்தின் சிதிலங்கள் தற்போது காணப்படுகின்றன. பேச்சு மொழியின் பிறப்பு மற்றும் வால்மீகி ராமாயணம் உருவானது ஆகியவற்றுக்கு இடையில் உள்ள தொடர்பை நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு கலாம் பேசினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us