Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

PUBLISHED ON : ஆக 05, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
திக்கெட்டும் பரவும் ஊழல்!

அனிதா பிரேம்சாயி, ஆஸ்திரேலியாவிலிருந்து அனுப்பிய, 'இ- மெயில்' கடிதம்: செய்தித்தாள்களில் நாள்தோறும், 'நில அபகரிப்பு' பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. செய்திகளைப் படிக்கும், இங்குள்ள நம் மக்கள், வெட்கப்படுகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், நாள்தோறும் உழைத்து, நியாயமான முறையில் சம்பாதித்து, அங்குள்ள தம் குடும்பத்தினருக்கு உதவும் இவர்களது மனப்பான்மை எங்கே... வெள்ளையும், சொள்ளையுமாக, ஒரு ஸ்கார்பியோ காரையும், சில அடிப்பொடிகளையும் மூலதனமாகக் கொண்டு திரியும், குறுகிய காலத்தில் பெரும் பணக்காரராக நினைக்கும், திடீர் அரசியல்வாதிகள் எங்கே? இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கட்சித்தலைவர்கள், இவ்வகை தொண்டர்களின் செயல்களை நியாயப்படுத்துகின்றனரா? கடந்த காலங்களில், இவ்வகை முறைகேடுகள் நடந்ததாக கூக்குரலிடும் இவர்கள், தங்கள் ஆட்சிக் காலங்களில், ஏன் அவ்வகை சமூக விரோதிகள் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை? அன்னிய நாட்டு மக்கள், செய்தித்தாள்களில் இத்தகவல்களை படித்து விட்டு, நம் இந்தியர்களிடம் இதைப் பற்றி கேட்கும் போது, நம் மக்கள் வெட்கப்பட வேண்டியுள்ளது.

பா.ம.க.,வின் சந்தை மதிப்பு என்ன?

என்.ராகவன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: தமிழக அரசியலில், நிறைய ஜோக்குகளையும், ஜோக்கர்களையும், இதுவரை மக்கள் ரசித்து இருந்தாலும், இந்த ஆண்டின் சிறந்த ஜோக்காக, முன்னிலை வகிப்பது, ராமதாஸ் தன் கட்சியின் பொதுக்குழுவில் வழங்கிய, பொன் மொழிகள் தான். அது, 'தமிழகத்தில் உள்ள, மற்ற கட்சிகளை விட, சுயமரியாதை அதிகம் உள்ள கட்சி, பா.ம.க., தான். வரும் 2016ல், தமிழகத்தில் பா.ம.க., தலைமையில் திராவிடக் கட்சிகள் இல்லாத, ஆட்சி அமையும்' என்பதே! பா.ம.க.,வுக்கு அரசியல் கட்சி அங்கீகாரமும், கட்சிக்கு மாம்பழச் சின்னமும் கிடைத்ததற்கு, அடித்தளமாக அமைந்ததே, திராவிடக் கட்சிகளோடு கூட்டணி அமைத்தது தான். சமீபத்திய சட்டசபைத் தேர்தலிலும், தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்ததால் தான், மூன்று சீட்டுகளாவது கிடைத்தன. இல்லையேல், 'சைபர்' என்ற மூன்று எழுத்துக்கள் தான் கிடைத்திருக்கும்.

தற்சமயம் இக்கட்சியின் அரசியல் சந்தை மதிப்பு செல்லுபடியாகாத, 25 காசாக உள்ளது என்பது, ஊர் அறிந்த நிதர்சன உண்மை. ஆகையால், இவர்களது தலைமையில் கூட்டணி அமைக்க, சில்லறைக் கட்சிகளும் தயங்குகின்றன. இவர்களோடு கூட்டு அமைத்தால், தங்கள் கட்சிகளும், 'ஆமை புகுந்த வீடாகி விடுமோ' என்ற அச்சம் இதற்குக் காரணம். கொத்தவால் சாவடி கொசு, கொலம்பியா விண்கலத்தில் செல்ல ஆசைப்பட்டது போல் இருக்கிறது, பா.ம.க.,வின் சினிமாஸ்கோப் கலர் கனவுகள்!

ஹெல்பர் வேலை: அரசு கவனிக்குமா?

கே.முருகானந்தம், மதுராந்தகத்திலிருந்து எழுதுகிறார்: தமிழக மின் வாரியத்தில், ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு, எலக்ட்ரீசியன், ஒயர்மேன் வேலைவாய்ப்பு பெற, ஹெல்பர் என்ற பணிக்கு, தேர்வு நடந்தது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, 2006ல், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இத்தேர்வு நடந்தது. செங்கல்பட்டு, தமிழ்நாடு மின்வாரியத்தில், ஆயிரம் பேர் நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர். மார்ச் மாதம், மத்திய அரசு மூலம், மாநில சட்டசபைதேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இதற்கிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த, 2008ம் ஆண்டில் தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை, ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் மூலம், சேர்ந்தவர்கள் 21 ஆயிரம் பேருக்கு மஸ்தூர் அடிப்படையில், பணி நியமன உத்தரவை, அப்போதைய தி.மு.க., அரசு வழங்கியது. இச்சூழலில், ஐ.டி.ஐ., படித்த, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசுவேலை கிடைக்காதா என, பல ஆண்டுகளாக ஏங்கி கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, வயது வரம்பு தளர்த்தி, வேலை வாய்ப்பு வழங்கவேண்டும். இதை மின் துறை அமைச்சர் கவனிப்பாரா?

காலத்தின் கோலம்!

டாக்டர்.ரா.அசோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'உன் நண்பன் பெயரைச் சொல், உன்னைப் பற்றி சொல்கிறேன்' என்று, ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. போலி லாட்டரி விற்பனை சம்பந்தமாக, தமிழகம்,கேரளா உட்பட, பல மாநிலங்களில், வழக்கில் சிக்கியவர் பிரபல லாட்டரி வியாபாரியான மார்ட்டின். இவர், 2005 - 2006ல், அ.தி.மு.க., ஆட்சியில் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக, தலைமறைவாக வாழ்ந்து வந்தார். பின், 2006ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், அரசு விழாக்களில் கலந்துக் கொண்டு, முதல்வரிசையில் அமர்ந்து, அன்றைய முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக உலா வந்தார். அடுத்து, கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில், வரவேற்புக் குழுத் தலைவராக, கருணாநிதியின் நூற்றுக் கணக்கான குடும்பத்தினர்களை வரவேற்று, திணறடித்தார் இவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், கதை - வசனம் எழுதி வாங்கி, 'பெண் சிங்கம், இளைஞன்' ஆகிய இரு திரைப்படங்களைத் தயாரித்து, கோடிகளை நண்பருக்காக இழந்தார். இன்று, 6.53 கோடி ரூபாய் பண மோசடி விவகாரம் தொடர்பாக, திருப்பூர் நடுவர் கோர்ட்டில் ஆஜராகி, ஜாமின் பெற்று, தொடர்ந்து, 20 நாட்களுக்கு திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில், கையெழுத்திட்டு வருகிறார். காலத்தின் கோலத்தைப் பாருங்களேன்!

நசுக்கிவிடும் ஹசாரேயை...

கலைநன்மணி மகிழ்நன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த, 44 ஆண்டு பயணத்தில், பார்லிமென்டில், அமைச்சரவை ஒரு வழியாக லோக்பால் மசோதாவை ஏற்றுக் கொண்டது. இது, பார்லிமென்ட் கூட்டத்திலும், அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேறி விடும். இந்த சட்ட வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள் வரமாட்டார்கள். பிற்காலத்தில் இந்த வரம்பு, அனுமார் வால் போல் நீளலாம்! சரி, எப்படியாவது போகட்டும். இந்த காந்தியவாதி, அன்னா ஹசாரே, ஆக., 16ல் உண்ணாவிரதம் இருந்து, ஏன் அவஸ்தைப்பட வேண்டும்? காங்கிரஸ் அசையும் என்றா? நிச்சயம் கண்டு கொள்ளாது. ஏதாவது நாடகமாடி, ஒன்று போராட்டத்தை நசுக்கிவிடும். காந்திய காலத்து, காங்கிரஸ் இன்று இல்லை என்பதை, ஹசாரே மட்டுமல்ல, அனைத்து மக்களும் உணர வேண்டும். எதிர்ப்பு தெரிவிக்கவாவது, காந்தியவாதிகள் உயிருடன் இருக்க வேண்டும் என்பதே, நம் ஆதங்கம்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us