Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ துாக்கத்திலும் புலம்ப வேண்டும்!

துாக்கத்திலும் புலம்ப வேண்டும்!

துாக்கத்திலும் புலம்ப வேண்டும்!

துாக்கத்திலும் புலம்ப வேண்டும்!

PUBLISHED ON : மார் 12, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
ஆர்.மணிசங்கர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக அரசோடு துளியும் ஒத்துழைக்காத மத்திய அரசு, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது தொடர்ந்து ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது. இது ஒரு சாதனையா?' என, வினவுகிறார் தமிழக அமைச்சர் நேரு.

கடந்த நான்கு ஆண்டுகளில், மத்திய அரசு திட்டங்களின் மீது, 'ஸ்டிக்கர்' ஒட்டி உரிமை கொண்டாடுவதை தவிர, எந்த ஒரு விஷயத்திலாவது இணக்கமாக இருந்துள்ளதாதமிழக அரசு?

மத்திய அரசு என்ன கழக உடன்பிறப்பா... தமிழக அரசு சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்ட!

ஒரு நிறுவனத்தில் தவறு நிகழ்வதாக சந்தேகம் எழுந்தால், அந்நிறுவனத்தில் சோதனை நடத்த வேண்டியது அமலாக்கத் துறையின் கடமை. அதைத் தானே தற்போது செய்கிறது?

திராவிட மாடல் ஆட்சியில், யார் என்ன முறைகேடு செய்தாலும் கண்டுகொள்ளக் கூடாதா?

ரெய்டுக்கு ஆளானவர்களே, திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அமைதியாக இருக்கும் போது, நேரு ஏன், 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல் குதிக்கிறார்?

மடியில் கனம் இல்லை என்றால், எதற்கு புலம்ப வேண்டும்?

நேர்மையாளர்கள் என்றால், அமலாக்கத் துறை என்ன... இந்திய உளவுத் துறையே வந்தாலும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டல்லவா இருக்க வேண்டும்?

நெஞ்சத்திலும், கைகளிலும் சுத்தம் இல்லை என்றால், துாக்கத்திலும் இப்படி புலம்பத்தான் வேண்டும்!

இப்படி கேட்கலாமா அண்ணாமலை?


சு.செல்வராஜன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கிடக்குறது எல்லாம் கிடக்கட்டும்... கிழவியைத் துாக்கி மனையில் வை' என்பது போல், சில நாட்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலினின் ஆங்கிலப் புலமை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார், பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை.

முதல்வரின் தமிழ் அறிவோ, கவிஞர் வைரமுத்துவை நம்பி இருக்கிறது. ஆங்கிலம், பொருளாதார அறிவெல்லாம், சில ஐ.ஏ.எஸ்.,களை அல்லவா நம்பி உள்ளது!

அவர் தலையே, 'விக்'கை நம்பி உள்ளது எனும்போது இது என்ன கேள்வி?

இன்றைய தமிழக மாணவர்களின் தமிழ் அறிவு, 'மெல்லத் தமிழ் இனி சாகும்' எனும் வாக்கு பலித்து வருவதை காட்டும் நிலையில், ஆங்கில அறிவோ அதல பாதாளத்தில்!

ஐ.ஏ.எஸ்., தேர்வில், தமிழர்களை பார்க்கவே முடியவில்லை.

இந்நிலையில், 'நீராரும் கடலுடுத்த' வை, 'நீயார் என் கட்டிலை உடைக்க' எனப் பாடுகிற ஒருவரின் தமிழ் புலமையை, 'ப்ரோ- ரேட்டா'வை, 'புரோட்டாவா' என்று கேட்கிறவரின் ஆங்கிலப் புலமையை, அண்ணாமலை கேள்வி கேட்பது வேடிக்கையாக இருக்கிறது.

'நீட்' வந்த பின், மருத்துவக் கல்வி வியாபாரம் படுத்துவிட்டது. மும்மொழிக் கொள்கையும் வந்து விட்டால், தன் தனியார் பள்ளி, 'கொள்ளை'யும் படுத்துவிடுமோ என்ற கவலையில் உள்ள முதல்வருக்கு கூடவே, தேர்தல் ஜுரம் வேறு!

மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் கமிஷன் தயாரிக்கும் வாக்காளர் பட்டியலில் சதி இருப்பதாக கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பதைப் போல, இவரும் தென் மாநிலங்களுக்கு எம்.பி., சீட்டுகள் குறைந்து விடும் என்றும், மும்மொழி கொள்கை என்ற பெயரில் ஹிந்தி திணிப்பு நடைபெறுகிறது என்றும் உளறிக் கொண்டிருக்கிறார்.

அவரது நிலைமை புரியாமல், அடிப்படை பிரச்னைகளை விட்டு விட்டு, அவருடைய ஆங்கிலப் புலமை குறித்து அண்ணாமலை கேள்வி கேட்கலாமா?

கொடுத்த வாக்கை மறக்கலாமா?


அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு பெட்டியை வைத்து, அத்தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அதை பெட்டிக்குள் போட்டு பூட்டி சாவியை சட்டைப் பையில் வைத்துக் கொண்டார்.

தான் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன், இப்பெட்டியில் போடப்பட்ட மனுக்கள் மீது, 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று கூறிச் சென்றார்.

அப்படி அவர் வாங்கிச் சென்றதில், புவனகிரி - வெள்ளாறு குறுக்கே தடுப்பணை கட்டக் கோரிக்கை வைத்து, புவனகிரி, சிதம்பரம் மக்கள் கொடுத்த மனுக்களும் அடங்கும்!

இதோ... தேர்தலில் வெற்றி பெற்று நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. 100 நாட்களில் தீர்வு காண்பேன் என்று கூறிய ஸ்டாலின், அது குறித்து சிறு முயற்சி கூட எடுக்கவில்லை.

பார்லிமென்ட் பிரசாரத்தின் போது, இப்பிரச்னை குறித்து நினைவுக்கு கொண்டு வந்தும், ஒரு பலனும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் இதற்கென நிதி ஒதுக்கப்படும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்ததில் ஏமாற்றமே மிச்சம்!

முதல்வர், கடலுார் மாவட்டத்தில் கடந்த மாதம் கள ஆய்வுக்கு வந்த போது, 'புவனகிரி - வெள்ளாறு குறுக்கே தடுப்பணை கட்டப்படும்; அதற்கான நிதி ஒதுக்கப்படும்' என, அறிவிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம்; அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

தடுப்பணை கட்ட, 112.35 கோடி நிதியை ஒதுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிதித்துறைக்கு ஒப்புதல் பெற, கடந்த 2023- - 24லேயே அனுப்பியதும், அது எந்த காரணத்தினாலோ அப்போது ஒதுக்கப்படவில்லை.

தற்போது, சிதம்பரம் செயற்பொறியாளர், உயர் அதிகாரிகள் வாயிலாக, தடுப்பணை கட்ட நிதி ஒதுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தடுப்பணை கட்டவில்லை என்றால், இப்பகுதி முழுதும் உப்பு நீராக மாறிவிடும்.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, வீராணம் ஏரியை ஆழப்படுத்த நிதி ஒதுக்கியுள்ள தமிழக அரசு, புவனகிரி மக்களை புறக்கணிப்பது ஏன்?

புவனகிரி தாலுகாவில் சேத்தியாத்தோப்பு முதல், பி.முட்லுார் வரை வெள்ளாற்றின் இரு கரையிலும் பல்லாயிரம் மக்கள் வசிக்கின்றனர். 112.35 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி, 50க்கும் மேற்பட்ட அக்கிராம மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய மறுப்பது ஏன்?

மார்ச் 14ல் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் இதற்கென நிதி ஒதுக்கி, புவனகிரி, சிதம்பரம் மக்களுக்கு தான் கொடுத்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றுவாரா?





      Our Apps Available On




      Dinamalar

      Follow us