ADDED : ஆக 14, 2011 10:26 PM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் மின்மோட்டார் பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சுவது அதிகரித்துள்ளது.
இதனால், பல வீடுகளுக்கு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். திருப்பூர் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன. முதலாவது, இரண்டாவது (மேட்டுப்பாளையம் குடிநீரும்), புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மூன்றாவது என மூன்று குடிநீர் திட்டங்களின் கீழ், ஐந்து லட்சம் லிட்டருக்கு மேல் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேடான பகுதிகள், மக்கள் தொகை நிறைந்த பகுதிகளில் தண்ணீர் பற்றாக் குறையை சமாளிக்க லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. பைப் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் முறையாக அனைத்து வீடுகளுக்கும் சென்றடைவதில்லை. சொந்த வீட்டுக்காரர்கள் பலர், அரை எச்.பி., இரண்டு எச்.பி., மோட்டார் பயன்படுத்தி மாநக ராட்சி குடிநீரை உறிஞ்சுகின்றனர். சிலரின் இச்செயலால், வாடகை வீட்டில் குடியி ருக்கும் பலருக்கு தண்ணீர் கிடைக்காமல் போய்விடுகிறது. சிறப்பு சாலைகள் நிதித்திட்டத்தின் கீழ் ரோடு போடப்பட்ட பல பகுதிகளில் சாலை உயரமாகி விட்டதால், போதிய குடிநீர் வருவதில்லை. இரண்டு மணி நேர வினியோகத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே நன்றாக தண்ணீர் வருகிறது. மற்ற நேரத்தில் அளவு குறைந்து வருவதாக பெண்கள் புலம்புகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் மோட்டார் பொருத்தி, குடிநீர் உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.