Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நில ஆக்கிரமிப்பை தடுக்க சாட்டிலைட் வரைபடம் : தமிழக கண்டோன்மென்ட்களில் அமல்

நில ஆக்கிரமிப்பை தடுக்க சாட்டிலைட் வரைபடம் : தமிழக கண்டோன்மென்ட்களில் அமல்

நில ஆக்கிரமிப்பை தடுக்க சாட்டிலைட் வரைபடம் : தமிழக கண்டோன்மென்ட்களில் அமல்

நில ஆக்கிரமிப்பை தடுக்க சாட்டிலைட் வரைபடம் : தமிழக கண்டோன்மென்ட்களில் அமல்

ADDED : ஆக 21, 2011 01:46 AM


Google News

ராணுவ நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க, சாட்டிலைட் மூலம் வரைபடம் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, கண்டோன்மென்ட் பகுதிகளில், இப்பணி துவங்கவுள்ளது. மத்திய அரசின் பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில், இந்தியாவில் 62 கண்டோன்மென்ட் நிர்வாகங்கள் உள்ளன. ராணுவப் பயிற்சி மையங்கள், முகாம்கள், ராணுவ அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்புகள் தவிர, ராணுவத்தைச் சேராத மக்கள் வசிக்கும் சிவில் பகுதிகளும் உள்ளன.



கண்டோன்மென்ட் பகுதிகளில் வீடு, வணிக வளாகம் உட்பட, கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள, பல நிபந்தனைகள் உள்ளன. ஆக்கிரமித்து, விதி மீறி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, கண்டோன்மென்ட் நிர்வாகங்கள் அனுமதி வழங்குவதில்லை. வீடுகளைக் கட்டுவோர், நடைபாதை, கழிவுநீர்க் கால்வாய், சாலை உட்பட அடிப்படை வசதிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், இத்தகைய வசதிகளை ஏற்படுத்தும் வகையிலும் தான், வீடுகளைக் கட்ட வேண்டும் என்பன உட்பட, விதிகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. இருப்பினும், ஐதராபாத் உட்பட பெரு நகரங்களில், ராணுவ நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, சமீபத்தில் பிரச்னை கிளம்பியது; விவகாரம், லோக்சபாவிலும் எதிரொலித்தது. விவாதத்தின் போது பேசிய, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி, ராணுவ நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தவிர்க்க, கண்டோன்மென்ட் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை, சாட்டிலைட் மூலம் வரைபடம் தயாரித்து, துல்லியமான எல்லையைக் கண்டறியும் யோசனையை முன்வைத்தார்.



அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள கண்டோன்மென்ட் போர்டுகளில் அமலுக்கு வந்துள்ளது; சாட்டிலைட் வரைபடம் தயாரிக்கும் பணி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில், சென்னை புனித தாமஸ் கண்டோன்மென்ட், நீலகிரி மாவட்டம் வெலிங்டன், கேரளா கண்ணணூர் கண்டோன்மென்ட்களில் அமலுக்கு வந்துள்ளது. வெலிங்டன் கண்டோன்மென்ட்டை பொறுத்தவரை, கண்டோன்மென்ட் எல்லைக்குள், எம்.ஆர்.சி., ராணுவப் பயிற்சி முகாம், ராணுவப் பயிற்சிக் கல்லூரி உட்பட, ராணுவ முக்கியத்துவம் பெற்ற பகுதிகள் அதிகளவு உள்ளன; அதே அளவுக்கு, சிவில் மக்கள் வசிக்கும் பகுதிகளும் உள்ளன. வெலிங்டன் கண்டோன்மென்ட் மலைப்பிரதேசமாக இருப்பதால், வரைபடத் தயாரிப்புக்கு கூடுதல் செலவாகும் என கணக்கிடப்பட்டு, 16.86 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெலிங்டனில் இப்பணியை மேற்கொள்ள, போர்டு உறுப்பினர்களின் ஒப்புதலோடு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் துவங்கவுள்ள இப்பணி மூலம், கண்டோன்மென்ட் எல்லைகள் துல்லியமாகக் கண்டறியப்பட்டு, நில ஆக்கிரமிப்பு, அபகரிப்பு இருந்தால் அகற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



மாநில அரசும் பின்பற்றுமா? : தமிழகத்தில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிலங்களில் வீடு கட்டும் பலர், அரசு நிலத்தை ஆக்கிரமிக்கின்றனர். குறிப்பாக, மலை மாவட்டமான நீலகிரியில், இலவச வீட்டு மனைப் பட்டாவுக்கு ஆசைப்பட்டு, அரசு நிலங்களை ஆக்கிரமிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது; இதனால், மழை, புயல் சமயங்களில் நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டு, சேதம் ஏற்படுகிறது. குன்னூர், ஊட்டி உட்பட நகராட்சிகளில், வருவாய்த் துறை மற்றும் நகராட்சி நிலங்களை, அரசியல் கட்சியினரின் ஆதரவுடன் ஆக்கிரமித்து, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியில்லாமல் வீடு கட்டி, பின், இலவச வீட்டு மனைப் பட்டாவுக்கு விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது; இதைத் தடுக்க, உள்ளாட்சி நிர்வாகங்கள் தயங்குகின்றன. கண்டோன்மென்ட் பகுதிகளில், நில ஆக்கிரமிப்பைத் தவிர்க்க, ஒட்டு மொத்த போர்டு உறுப்பினர்களும் கைகோர்த்துள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள் பலர், நில ஆக்கிரமிப்பு, அபகரிப்பை ஊக்குவித்து வருகின்றனர். எனவே, மாநில அரசும், நில ஆக்கிரமிப்பைத் தடுக்க, இதுபோன்ற நடவடிக்கை எடுத்தால், இயற்கைச் சீற்றங்களின் போது, அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.





- நமது சிறப்பு நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us