Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது பரபரப்பு :புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது பரபரப்பு :புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது பரபரப்பு :புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது பரபரப்பு :புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

ADDED : ஆக 17, 2011 04:05 AM


Google News
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பரபரப்பான சூழ்நிலையில் நாளை துவங்குகிறது. சபையில் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி புயலை கிளப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.முதல்வர் ரங்கசாமி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று, மூன்று மாதங்களுக்கு பின், சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை(18ம் தேதி) துவங்குகிறது.சபையில் நாளை காலை 11.30 மணிக்கு, கவர்னர் இக்பால்சிங் உரையாற்றுகிறார். கவர்னர் உரையை தொடர்ந்து சபை ஒத் வைக்கப்படுகிறது. அடுத்த வாரத்தில், பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது தொடர்பாக முடிவு செய்ய அலுவல் ஆய்வுக் குழு நாளை கூடுகிறது. ஆளும் என்.ஆர். காங்., கட்சிக்கு சட்டசபையில் 14 எம்.எல்.ஏ.,க்கள் பலம் உள்ளது. சுயேச்சை எம்.எல்.ஏ., வி.எம்.சி.சிவக்குமார், ஆட்சிக்கு ஆதரவுக் கரம் நீட்டி உள்ளார். இவரையும் சேர்த்தால் சட்ட சபையில் ஆளுங்கட்சியின் பலம் 15ஆக உள்ளது. எதிர்கட்சி வரிசையில் பிரதான எதிர்கட்சியாக 7 எம்.எல். ஏ.,க்களை கொண்டுள்ள காங்., கட்சி அமர்ந்துள்ளது. ஐந்து எம்.எல்.ஏ.,க்களுடன் அ.தி.மு.க., மற்றும் 2 எம்.எல்.ஏ.,க்களுடன் தி.மு.க., ஆகியவையும் எதிர்கட்சி வரிசையில் இடம் பிடித்துள்ளன. சட்டசபையில் எதிர்கட்சிகளின் பலம் 14ஆக உள்ளது. சட்டசபையில் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் ஒரே ஒரு இடம் மட்டுமே வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சூழ்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுங்கட்சியுடன் மோதுவதற்கு எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன. சட்டசபை தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்ட என்.ஆர். காங்.,-அ.தி.மு.க., இடையிலான தேனிலவு தேர்தலுக்கு பிறகு முடிவுக்கு வந்தது. என்.ஆர். காங்., அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் அ.தி.மு.க., தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. சட்டசபையில் நூதன போராட்டங்களை நடத்தவும், பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து அரசுக்கு கடும் நெருக்கடியை அளிக்கவும் அ.தி.மு.க., முழு வீச்சில் தயாராகி விட்டது.சபையில் ஆவேசமாக செயல்படுவதைவிட, அரசின் செயல்பாடுகளை நுணுக்கமாக விமர்சனம் செய்யவும், பதில்

கூற முடியாத அளவிற்கு திக்குமுக்காட செய்யவும் காங்., கட்சியில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்., எம்.எல்.ஏ.,க்களில் திருமுருகன் மட்டுமே புதுமுகம். மற்ற 6 எம்.எல்.ஏ.,க்களும் அமைச்சர்களாக இருந்து பழுத்த அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க.,வை பொறுத்தவரை, தற்போது காங்., கூட்டணியில் உள்ளது. எனவே, காங்கிரசை பின்பற்றி தி.மு.க.,வின் செயல்பாடுகள் இருக்கும். அதேசமயம், என்.ஆர். காங்., கட்சியுடன் சுமூகமான அணுகுமுறையை பின்பற்றவே தி.மு.க., விரும்புகிறது. எதிர்கட்சிகளை சமாளிப்பது குறித்தும், சட்டசபையில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பாக விவாதிக்கவும் என்.ஆர். காங்., எம்.எல். ஏ.,க்கள் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் இன்று மாலை நடக்கிறது. சட்டசபை வளாகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் முதல்வர் பேசுகிறார். இதுபோன்ற சூழ்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரில் பரபரப்பான சம்பவங்களுக்கு குறைவு இருக்காது என்றே

தெரிகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us