சிகிச்சை தாமதத்தால் குழந்தை இறப்பு
சிகிச்சை தாமதத்தால் குழந்தை இறப்பு
சிகிச்சை தாமதத்தால் குழந்தை இறப்பு
ADDED : செப் 19, 2011 06:13 PM
திண்டிவனம் : திண்டிவனம் அரசு மருத்துவமனையில், சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், குழந்தை இறந்ததாக, உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த முருக்கேரி கொளத்தூரைச் சேர்ந்தவர் சுப்பையா, 38; இவரது மனைவி ஷகிலா, 28.
இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று , இரண்டாவது பிரசவத்திற்காக, முருக்கேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஷகிலாவை சேர்த்தனர்.அதிகாலை, 4.30 மணிக்கு, ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை எடை குறைவாக, 1.350 கிலோ இருந்ததால், 108 ஆம்புலன்ஸ் மூலம், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதிகாலை, 5.30 மணிக்கு, ஷகிலா, பிறந்த குழந்தையுடன் வந்த போது, மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்டிருந்தது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்த செவிலியர்கள், ஓய்வு அறையில் இருந்த டாக்டர் ஏகாம்பரத்திற்கு தகவல் தெரிவித்தனர்.காலை, 6.45 மணிக்கு வந்த டாக்டர், குழந்தையை பரிசோதனை செய்துவிட்டு, குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.குழந்தையின் தந்தை சுப்பையா கூறுகையில், 'மருத்துவமனைக்கு வந்தவுடன் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்' என கதறி அழுதார்.இதனால் ஆவேசமடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், மருத்துவமனை எதிரே போராட்டம் நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை மருத்துவர் தங்கராஜ் உறுதி கூறியதால், காலை 11 மணியளவில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.