மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு 30 சதவீதம் அதிகரிப்பு
மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு 30 சதவீதம் அதிகரிப்பு
மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு 30 சதவீதம் அதிகரிப்பு

ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அரசு சார்பற்ற நிறுவனம், மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.
அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாவது: பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் தற்போதைய சொத்து மதிப்பு, சராசரியாக 10.6 கோடி ரூபாயாக உள்ளது.கடந்த 2009ம் ஆண்டில், அமைச்சர்களின் சொத்து மதிப்பு 7.3 கோடி ரூபாயாக இருந்தது. அதாவது, சராசரியாக 3.3 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள, 77 சதவீத அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள்.
மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் பிரபுல் படேலின் தற்போதைய சொத்து மதிப்பு 122 கோடி ரூபாய். கடந்த 2009ம் ஆண்டில், இவரது சொத்து மதிப்பு 79.8 கோடி ரூபாய்.
இவருக்கு அடுத்ததாக, தி.மு.க., அமைச்சர் ஜெகத்ரட்சகனின் சொத்து மதிப்பு, 2009ம் ஆண்டில், 5.9 கோடி ரூபாயாக இருந்தது, 64.5 கோடி ரூபாய் அதிகரித்து, தற்போது, 70 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல்நாத்தின் தற்போதைய சொத்து மதிப்பு, 41 கோடி ரூபாய்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், இவரது சொத்து மதிப்பு 14 கோடி ரூபாய். அதன்பின், இரண்டு ஆண்டுகளில், 26 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதேபோன்று, மேலும் பல அமைச்சர்களின் சொத்து மதிப்பு, இரண்டு ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் கமிட்டி பதவி போச்சு: ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., சுரேஷ் கல்மாடி ஆகிய மூன்று பேரும், பார்லிமென்ட் நிலைக்குழு உறுப்பினர் பதவியை, தற்காலிகமாக இழந்துள்ளனர்.
ராஜா உட்பட மூன்று எம்.பி.,க்களை, பார்லிமென்ட் நிலைக்குழுவில் இருந்து நீக்கியதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பார்லிமென்ட் விதிகளின்படி, எம்.பி.,யாக இருப்பவர் நிலைக்குழுவில் இடம் பெற தகுதியுடையவர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குருதாஸ் தாஸ் குப்தா, பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பாரத்ருகாரி மகதாப், மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களை கடுமையாக விமர்சிப்பவர்கள்.அவர்கள் நிதி தொடர்பான நிலைக்குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.