Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பக்கவாத்தியம்/பக்க வாத்தியம்

பக்க வாத்தியம்

பக்க வாத்தியம்

பக்க வாத்தியம்

PUBLISHED ON : செப் 08, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

'எப்படி ஆட்சி அமையும்...?'



கர்நாடக மாநில காங்., தொழிலாளர் பிரிவு தலைவர் பிரகாசம், சமீபத்தில் மதுரை வந்தார்.

ராஜிவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள மூவர் தூக்கு தண்டனை குறித்து காங்., சார்பில் யாரும் கருத்து தெரிவிக்காததை கேள்விப்பட்டு, தன் கருத்தை பதிவு செய்ய பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். காலேஜ் ஹவுசில் தங்கியிருந்த பிரகாசத்தை உள்ளூர் கட்சி நிர்வாகிகள் ஒருவர் கூட சந்திக்கவில்லை. செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்களும் அங்கில்லை. ஒன்றிரண்டுபத்திரிகையாளர்கள் மட்டும் சென்றதும், அவர்களுக்கு பேட்டி கொடுத்த பிரகாசம், உள்ளூர் கட்சிகாரர்களை கடுமையாக சாடினார். 'மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் போதே, காங்கிரசார் இப்படி இருந்தால், எப்படி காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் அமைக்கப் போகிறார்கள்...?' என, புலம்பியபடியே பேட்டியை முடித்துக் கொண்டார்.இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'பாவம்... நம்மூர் காங்கிரசைப் பத்தி இவருக்கு தெரியலை...' என, 'கமென்ட்' அடித்துவிட்டு கிளம்பினார்.



'இவர் வேறயா...?'



விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில், அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், குமரகுரு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., ஞானமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.அவர்கள் பேசும்போது, 'கடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., ஒரு ஒன்றிய கவுன்சிலர் சீட்டைக் கூட பிடிக்கவில்லை. வரும் தேர்தலில் சேர்மன் பதவியையும் சேர்த்து பிடித்தாக வேண்டும்' என்றனர்.இதைக் கேட்ட புதிய மாவட்ட செயலர் மோகன், 'இந்த ஒன்றியத்தில் பல தேர்தல்களில் அ.தி.மு.க., அதிக ஓட்டுகள் பெற்றுள்ளது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் எங்கேயோ ஓட்டை விழுந்து விடுகிறது. இந்த தேர்தலில் சேர்மன் பதவியை பிடித்தே தீர வேண்டும். கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும், எந்தப் பொறுப்பிலிருந்தாலும், அம்மாவிடம் சொல்லி தண்டிக்கப்படுவர்' என்று எச்சரித்தார்.இதைக் கேட்ட தொண்டர் ஒருவர், 'ம்... கட்சியில என்ன நடந்தாலும் உடனே, 'அம்மா'வுக்கு, 'மொட்டை பெட்டிஷன்' போட்டு காலி பண்ணிடறாங்க... இந்த,'பார்முலா' நல்லாவே வேலை செய்யுது...' என, பாராட்டியபடியே சென்றார்!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us