PUBLISHED ON : ஜூலை 21, 2024 12:00 AM

ஜூலை 21, 1929
சென்னை, தண்டையார்பேட்டையில், நாராயணன் செட்டியார் - வேதம்மாள் தம்பதியின் மகனாக, 1874, டிசம்பரில் பிறந்தவர் தணிகாசலம் செட்டியார்.
இவர், முத்தியால்பேட்டை நடுநிலைப் பள்ளியில் படித்து, சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். தலைமை தபால் நிலையம், ஐரோப்பிய நிறுவனங்களில் எழுத்தராகப் பணியாற்றினார். சட்ட கல்லுாரியில் படித்து, 'பீவ்ஸ் அண்டு கோ' எனும் சட்ட நிறுவனத்தில் பணியாற்றி, அதன் ஆலோசகரானார்.
சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர், சி.நடேச முதலியாருடன் இணைந்து நீதிக்கட்சியை துவக்கினார். சென்னை மாநகராட்சி கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றார். பெரம்பூர் மில் தொழிலாளர் பிரச்னையில், கவர்னருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்.
சுயமரியாதை மாநாட்டில் பங்கேற்றார். உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, தன் 54வது வயதில், 1929ல் இதே நாளில் மறைந்தார். சென்னை தியாகராய நகரில், ஒரு தெருவின் பெயரால் வாழும் சமூக நீதி காவலர் மறைந்த தினம் இன்று!