அரசு தடுப்பூசி மையங்களில் மீண்டும் உற்பத்தியை துவக்க தாமதம் ஏன்?
அரசு தடுப்பூசி மையங்களில் மீண்டும் உற்பத்தியை துவக்க தாமதம் ஏன்?
அரசு தடுப்பூசி மையங்களில் மீண்டும் உற்பத்தியை துவக்க தாமதம் ஏன்?
சென்னை : மத்திய சுகாதாரத் துறைக்கு சொந்தமான தடுப்பூசி ஆய்வு மையங்களில், தடுப்பூசி மருந்துகள் மீண்டும் உற்பத்தி செய்வது தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
தனியார் மருந்து நிறுவனங்கள் பயன் பெற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், தடுப்பூசி மருந்துஉற்பத்தி திட்டமிட்டே தாமதப்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.இந்தியாவில் சென்னை கிண்டியில் உள்ள பி.சி.ஜி., தடுப்பூசி ஆய்வுக்கூடம், இமாசலப் பிரதேசம் கசவ்லியில் உள்ள மத்திய ஆராய்ச்சி மையம், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள லூயி பாஸ்டர் தடுப்பூசி மையம் ஆகிய மூன்று மத்திய அரசு நிறுவனங்கள் மூலம், நாட்டுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டதோடு, பிற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டன.
இதையடுத்து, 2008ம் ஆண்டு ஜனவரியிலிருந்து, இந்த மையங்களில் தடுப்பூசி மருந்து உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது. அன்று முதல், தேசிய தடுப்பூசி திட்டம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசி மருந்துகள், கூடுதல் செலவில் தனியார் மருந்து நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அரசு தடுப்பூசி நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியதற்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்ததால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், இந்த மூன்று தடுப்பூசி மையங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது. ஆனால், தடை நீக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் கிண்டி பி.சி.ஜி., ஆய்வகம், குன்னூர் லூயி பாஸ்டர் மையத்தில் இன்னும் உற்பத்தி துவங்கவில்லை. கசவ்லி ஆராய்ச்சி மையத்தில் மட்டும் பெயரளவில் உற்பத்தி நடைபெறுகிறது.
இதற்கிடையே. கிண்டி பி.சி.ஜி., ஆய்வகத்தை, மருந்துகளை பரிசோதித்து சான்று அளிக்கும் டெஸ்டிங் லேப்பாக மாற்ற முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 2008ல் தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தியவுடன், இந்த மூன்று மையங்களும் டெஸ்டிங் லேப்பாக மாற்றப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்தது. ஆனால், கடும் எதிர்ப்பின் காரணமாகவே அந்த முடிவு கைவிடப்பட்டது. ஆனால், இப்போது மீண்டும் கிண்டி மையத்தை டெஸ்டிங் லேப்பாக மாற்ற முயற்சி நடப்பதாக அங்கு பணிபுரியும் பெயர் வெளியிட விரும்பாத ஊழியர் ஒருவர் தெரிவித்தார். கிண்டியில் தற்போது உள்ள ஆய்வுக் கூடம் மிகவும் பழமையானது. அதை, இடித்து தள்ளிவிட்டு புதிய கட்டடம் கட்டும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏதாவது ஒரு காரணத்தை காட்டி, மீண்டும் தடுப்பூசி உற்பத்தியை தாமதப்படுத்தவே இதுபோன்ற யோசனைகள் முன்வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மருந்து உற்பத்தி தாமதப்படுவது குறித்து, கிண்டி பி.சி.ஜி., ஆய்வக தலைமை மருத்துவ அதிகாரி ஹசனிடம் கேட்டபோது, ''மீண்டும் உற்பத்தியை துவங்க மூன்றாண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் உற்பத்தி துவங்கப்படும்,'' என்றார். விஞ்ஞான தொழில்நுட்பத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக நாம் முன்னேறி உள்ளதாக மார்தட்டிக் கொள்கிறோம். ஆனால், ஏற்கனவே தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்த மையங்களில், 'சிறந்த உற்பத்தி நடைமுறைகள்' உருவாக்க ஆண்டுக் கணக்கில் தாமதம் ஆவது ஏன் என்பது தெரியவில்லை.