ADDED : ஜூலை 25, 2011 09:23 PM
திருப்பூர் : திருப்பூர் ரோடுகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதோடு, விதிமுறைக்கு மீறி சரக்கு வாகனங்கள் இயக்கப் படுவதால் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.
திருப்பூரில் வாகன பெருக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகளவு உள்ளது. குமரன் ரோடு, பழைய மார்க்கெட் வீதி, தாராபுரம் ரோடு, காங்கயம் ரோட்டில் உள்ள கடைகளின் முன் ஆக்கிரமிப்பு, தள்ளுவண்டி கடைகள் அதிகரிப்பு காரணமாக ரோடுகள் மிகவும் குறுகலாக மாறியுள்ளன. இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.மூன்று மாதத்துக்கு முன், கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் ஆக்கிரமித் திருந்த பகுதிகள் அகற்றப்பட்டன. விதிமுறையை மீறி நகருக்குள் நுழைந்த சரக்கு வாகனங்களை கண்காணித்து, பறிமுதல் செய்ததோடு, வழக்குப்பதிவு, அபராதம் என நடவடிக்கை எடுத்தனர். சில நாட்கள் ஆக்கிரமிப்புகள் இல்லாமலும், சரக்கு வாக னங்கள் தொல்லை இல்லாமலும் இருந்தன.தற்போது மீண்டும் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் முளைக்க ஆரம்பித் துள்ளன. அதேபோல், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் ரோடுகளில் சரக்கு வாகனங்கள் வருவதோடு, ரோட்டை ஆக்கிரமித்தே நிறுத்தப்பட்டு, சரக்குகள் இறக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மீண்டும் முக்கிய ரோடுகளில் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பு மற்றும் விதிமுறை மீறும் சரக்கு வாகனங்களை போலீசார் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.