மெஸ், பஸ் கட்டண வசூல்: ஏழை மாணவர்கள் திணறல்
மெஸ், பஸ் கட்டண வசூல்: ஏழை மாணவர்கள் திணறல்
மெஸ், பஸ் கட்டண வசூல்: ஏழை மாணவர்கள் திணறல்
ADDED : செப் 01, 2011 12:14 AM
சென்னை : தனியார் பொறியியல் கல்லூரிகளில், பஸ் மற்றும் மெஸ் கட்டணம், கட்டாயமாக வசூலிக்கப்படுதால், ஏழை மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தனியார் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், 65 சதவீதம் அரசு ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இதனால், அரசு பள்ளிகளில் பயின்று, ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 தேர்ச்சிப் பெறும் நடுத்தர, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், தனியார் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் இன்ஜினியரிங் படிக்க இடம் கிடைத்து விடுகிறது. மேலும், ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்களில் பெரும்பாலோர், முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிகளாக இருப்பதால் இவர்களுக்கு, கல்வி கட்டணமாக ஆண்டிற்கு, 20 ஆயிரம் ரூபாயை அரசு வழங்குகிறது. இத்தொகை போக, ஆண்டிற்கு, 12 ஆயிரத்து, 500 ரூபாய் செலவு செய்தால் போதும்.ஆனால், பெரும்பாலான தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள், 'டே ஸ்காலர்' மாணவர்களிடம் பஸ் கட்டணம், மெஸ் கட்டணம் என்ற வகையில், ஆண்டிற்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, கட்டாய வசூல் செய்கின்றன. இதன் மூலம் மாணவர்கள், கல்லூரி பஸ்சில் செல்வதும், காலை, மதியம், கல்லூரி நிர்வாகம் அளிக்கும் உணவை அருந்துவதும் கட்டாயமாக்கப்படுகிறது. இதனால், பி.இ., பயிலும் ஏழை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர், கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, சென்னை அண்ணா பல்கலை அலுவலர் ஒருவர் கூறும்போது, ''டே ஸ்காலர் மாணவர்களிடம், பஸ் மற்றும் மெஸ் கட்டணத்தை கட்டாயமாக வசூல் செய்வது தொடர்பாக மாணவர்கள், தொழில்நுட்ப கல்வி கமிஷனரிடம் புகார் செய்யலாம்,'' என்றார்.
-நமது சிறப்பு நிருபர்-