Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தென் மாநிலங்களின் ஜனநாயக வலிமை குறையும்: முதல்வர் ஸ்டாலின்

தென் மாநிலங்களின் ஜனநாயக வலிமை குறையும்: முதல்வர் ஸ்டாலின்

தென் மாநிலங்களின் ஜனநாயக வலிமை குறையும்: முதல்வர் ஸ்டாலின்

தென் மாநிலங்களின் ஜனநாயக வலிமை குறையும்: முதல்வர் ஸ்டாலின்

UPDATED : ஜூன் 07, 2025 09:28 AMADDED : ஜூன் 06, 2025 06:12 PM


Google News
Latest Tamil News
சென்னை: ''வரும் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும் '' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021ம் ஆண்டு நடக்க இருந்தது. ஆனால், கொரோனா உள்ளிட்ட காரணங்களினால் அது தள்ளிப் போனது. இச்சூழ்நிலையில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027 மார்ச் 1ம் தேதி துவங்கும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது.

* மத்திய பா.ஜ., அரசு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன.

* அதேவேளையில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைப் பல பத்தாண்டுகளாகக் காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ பார்லிமென்டில் கூடுதல் இடங்களைப் பெற இருக்கின்றன. அநீதியான இந்த நடவடிக்கை கூட்டாட்சியின் சமநிலையைக் குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது.

* இந்தச் சதித் திட்டம் குறித்து நான் முன்பே எச்சரித்திருந்தேன். தற்போது, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும், பா.ஜ., எப்படி இந்தக் கைவரிசையைக் காட்டப் போகிறது என்பதை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். நாம் விழிப்போடு இருப்பது மட்டுமல்ல, தென்னகத்தின் குரலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்டவேண்டிய தருணம் இது.

* 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகள் போய், 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகள்தான், அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறுவரையறைக்கு, அடிப்படையாக அமையும். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, தனக்குச் சாதகமான முறையில் பார்லிமென்ட் இடங்களை பா.ஜ., நிர்ணயித்துக் கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும்.

* தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் சொல்கிறது. ஆனால் இவை தெளிவற்ற மழுப்பல் பதில்கள். இவர்கள் சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதிவைக்க வேண்டும். நாம் கேட்பதெல்லாம் பார்லிமென்டில் உறுதி அளியுங்கள், உரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்பதே!

* பிரிவு 370-ஐ நீக்கிய பிறகு என்ன நடந்தது என்று பார்த்தாலே இவர்களது பேச்சின் இலட்சணம் புரிந்துவிடும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு சொன்னது. தேர்தலும் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்திலேயே உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், ஜம்மு காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சத்தியவான்களோடுதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

* 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும்.

* அ.தி.மு.க. போன்ற கட்சிகள் தங்கள் சுயநலத்துக்காக பா.ஜ. முன் மண்டியிட்டாலும், தி.மு.க.வின் தலைமையில் ஓரணியில் தமிழகம் அணிவகுக்கும்! நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us