/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திறப்பு விழாவிற்கு காத்திருந்த அரசு கட்டடங்களுக்கு விடிவு கிடைத்ததுதிறப்பு விழாவிற்கு காத்திருந்த அரசு கட்டடங்களுக்கு விடிவு கிடைத்தது
திறப்பு விழாவிற்கு காத்திருந்த அரசு கட்டடங்களுக்கு விடிவு கிடைத்தது
திறப்பு விழாவிற்கு காத்திருந்த அரசு கட்டடங்களுக்கு விடிவு கிடைத்தது
திறப்பு விழாவிற்கு காத்திருந்த அரசு கட்டடங்களுக்கு விடிவு கிடைத்தது
ADDED : ஆக 22, 2011 11:24 PM
உடுமலை : காவலர் வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் திறப்பு விழாவிற்கு காத்திருந்த தளி போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கொமரலிங்கம் போலீஸ் குடியிருப்பு நேற்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
உடுமலை தாலுகாவில் முதன்முதலாக தளி போலீஸ் ஸ்டேஷன் 1920 ம் ஆண்டு துவங்கப்பட்டது. 12.05 சென்ட் பரப்பில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., அறை, ஆவணம் மற்றும் கைதி அறை உட்பட ஐந்து அறைகளுடன் கூடிய ஓட்டுக்கட்டடத்தில் ஸ்டேஷன் இயங்கி வந்தது. பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில், மேற்கூரை சேதமடைந்து மழைக்காலங்களில் கட்டடத்தினுள் தண்ணீர் கொட்டியது. தற்காலிகமாக ஓடுகளை மாற்றியும், கான்கிரீட் பூச்சு அமைத்து போலீசார் காலம் தள்ளி வந்தனர். கட்டடத்தின் பக்கவாட்டு சுவர்களும் விரிசல் விட்டு பீதி ஏற்படுத்தியதுடன் மழைக்காலங்களில் கட்டடத்தினுள் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து, கடந்த 2009 ம் ஆண்டு இறுதியில் புதிய கட்டடம் கட்ட அரசு 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, பராமரிப்பில்லாத பழைய காவலர் குடியிருப்பு கட்டடம் அருகில் 90 சென்ட் இடத்தில் கட்டுமான பணிகள் துவங்கின. கடந்தாண்டு இறுதியில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டதும், புதிய கட்டடத்திற்கு ஸ்டேஷன் மாற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பழைய கட்டடத்தில் பீதியுடனேயே தளி போலீசார் பணிகளை மேற்கொண்டு வந்தனர். கொமரலிங்கத்தில், 46 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட போலீஸ் குடியிருப்பும் திறப்பு விழாவிற்காக காத்திருந்தது. ஒரு எஸ்.ஐ., மற்றும் ஆறு காவலர்களுக்காக கட்டப்பட்ட இந்த குடியிருப்பு திறக்கப்படாததால் போலீசார் அவதிக்குள்ளாகி வந்தனர். நீண்ட இழுபறிக்கு பிறகு இந்த இரண்டு கட்டடங்களும் நேற்று முதல்வரால் வீடியோ கான்பரன்ஸ் முறையில் திறந்து வைக்கப்பட்டது. எவ்வித விழாவும் நடத்தப்படாமல், சம்பந்தப்பட்ட போலீசாரே எளிமையாக திறப்பு விழாவை நடத்தினர். தளி போலீஸ் ஸ்டேஷனை மதியம் 2.05 மணிக்கு உடுமலை டி.எஸ்.பி., செந்தில் திறந்து வைத்தார். கட்டங்களுக்கு திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளதால், பல்வேறு பிரச்னைகள் முடிவுக்கு வந்துள்ளன. பழமை வாய்ந்த தளி போலீஸ் ஸ்டேஷனை பாரம்பரிய சின்னமாக பராமரிக்கலாம் என அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் பழைய கட்டடம் இடிக்கப்படும் வாய்ப்பில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு துறை எதிர்பார்ப்பு உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்காக குடியிருப்பு கட்டும் பணிகள் 2008 ம் ஆண்டு இறுதியில் துவங்கப்பட்டது. ஒரு கோடி ரூபாய் செலவில் துவங்கப்பட்ட கட்டுமான பணிகள் பல்வேறு இழுபறிக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் முடிக்கப்பட்டு, கட்டடம் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இந்த கட்டடத்திற்கு திறப்பு விழா நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீடு ஒதுக்கீடு பெறாமலேயே மின் கட்டணம் ஆகியவற்றை செலுத்தியபடி திறப்பு விழாவிற்காக தீயணைப்பு துறையினர் காத்திருக்கின்றனர்.இந்த கட்டடத்திற்கும் விடிவு கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தீயணைப்பு துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.


