/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாவட்டத்தில் சுங்க வரி வசூலில் அடாவடி : முறைப்படுத்த நடவடிக்கை தேவைமாவட்டத்தில் சுங்க வரி வசூலில் அடாவடி : முறைப்படுத்த நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் சுங்க வரி வசூலில் அடாவடி : முறைப்படுத்த நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் சுங்க வரி வசூலில் அடாவடி : முறைப்படுத்த நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் சுங்க வரி வசூலில் அடாவடி : முறைப்படுத்த நடவடிக்கை தேவை
ADDED : ஆக 22, 2011 10:10 PM
சிதம்பரம் : மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக கூடுதலாகவும், முறையான ரசீது இல்லாமலும் அடாவடியாக நடந்து வரும் சுங்க வரி வசூல் முறைகேட்டை சரிப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை பெருக்கும் நோக்கில் பேரூராட்சி, நகராட்சி, ஒன்றிய பகுதிகளில் வாகனங்களுக்கு சுங்க வரி வசூல் செய்யப்படுகிறது. அதற்காக முறைப்படி ஏலம் விடப்பட்டு, கார், வேன், லாரி, பஸ் என வாகனங்களுக்கு ஏற்ப கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூல் செய்வதில்லை. கான்ட்ராக்ட் எடுத்தவர்கள் அவர்களே கட்டணம் நிர்ணயித்துக் கொள்வதுடன், முறையான ரசீதும் கொடுப்பதில்லை. ரசீதில் உரிய கையெழுத்தோ, ரசீது எண், சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் சீல் என எதுவும் இல்லை.
கடமைக்கென அவர்களே இரண்டு மூன்று வகையான ரசீது அச்சடித்துக் கொண்டு அடாவடி வசூலில் ஈடுபடுகின்றனர். சில ரசீதில் உள்ளாட்சி அமைப்பின் பெயர், ஒப்பந்ததாரர் பெயர், வசூலிப்பவர், எவ்வளவு தொகை என உள்ளது. மற்ற வகையில் ரசீது வரிசை எண் உள்ளிட்ட எந்த தகவலும் இருக்காது. எவ்வளவு தொகை என்பதைக் கூட கையால் எழுதிக் கொடுக்கின்றனர். அச்சடிக்கப்பட்ட ரசீது சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அதிகாரியிடம் அனுமதி பெற்ற பின்பு அலுவலக முத்திரையிட்ட பின்னரே கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என விதி இருந்தும் அதை கான்ட்ராக்டர்கள் பின்பற்றுவதில்லை. அதனை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
இதுபற்றி சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு பல புகார்கள் குவிந்த போதிலும், நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். கூடுதல் கட்டணம் வசூல் செய்கிறீர்களே எனக் கேட்டால், நாங்கள் அதிக தொகை கொடுத்து ஏலம் எடுத்துள்ளோம் அப்படித்தான் வசூல் செய்வோம் என மிரட்டும் தொணியில் பேசுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். சுற்றுலாத் தலங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ரசீதில் 20 ரூபாய் என இருக்கும். ஆனால் வண்டி எங்கிருந்து வந்துள்ளது என்பதை வைத்து ரூபாய் 50 முதல் 200 வரை வசூல் செய்யும் அடாவடி செயலும் சிதம்பரம் போன்ற பகுதிகளில் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் சுங்க வரி வசூல் சட்டத்திற்கு புறம்பாக நடந்து வருகிறது. குறிப்பாக பரங்கிப்பேட்டை, கிள்ளை முடசல் ஓடை, நெல்லிக்குப்பம், குள்ளஞ்சாவடி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி போன்ற பகுதிகளில் கொஞ்சம் அதிகமாகவே இந்த அடாவடி நடக்கிறது. அவர்கள் வழங்கும் ரசீதில் வரிசை எண் இருப்பதில்லை. ஒப்பந்ததாரர், வசூலிப்பவர் போன்ற தகவல்கள் கூட இருப்பதில்லை. அரசின் விதிகளை மீறி நடைபெற்று வரும் சுங்கவரி வசூலை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


