தினம் ஒரு தற்கொலை நாடகம் கலெக்டர் அலுவலகத்தில் அரங்கேற்றம்
தினம் ஒரு தற்கொலை நாடகம் கலெக்டர் அலுவலகத்தில் அரங்கேற்றம்
தினம் ஒரு தற்கொலை நாடகம் கலெக்டர் அலுவலகத்தில் அரங்கேற்றம்
ADDED : ஜூலை 27, 2011 01:09 AM
கோவை : உள்ளூர் ஊடகங்களின் ஆதரவால், தனிநபர் பிரச்னைகளுக்காக தற்கொலை நாடகம் நடத்துகிற இடமாக, கோவை கலெக்டர் அலுவலகம் மாறி வருகிறது. கோவை கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் மக்கள் குறைகேட்பு முகாம் நடக்கிறது. இதில், பொதுப் பிரச்னைகள், பட்டா, கடனுதவி போன்றவற்றுக்கான மனுக்கள் மட்டுமே பெறப்படுகின்றன. சமீப காலமாக, குடும்பப் பிரச்னை, தனி நபர்களுக்கான பிரச்னை தொடர்பான மனுக்களும் அதிகமாக வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, அரசு அதிகாரிகளால் தலையிட முடியாத அல்லது தீர்த்து வைக்க முடியாத பிரச்னைகள். இதுபோன்ற மனுக்களைத் தரும் நபர்கள், வரும்போதே நூதன போராட்டத்துக்கான திட்டத்துடன் வருகின்றனர். இவர்களை உள்ளூர் தொலைக்காட்சிகள் படம் பிடித்துக் காட்டுவதால், இவர்களுக்கு, 'இலவச' விளம்பரம் கிடைத்து விடுகிறது.
உளவுத்துறை போலீசாரும் அடித்துப் பிடித்து, இவர்களின் போராட்டம் பற்றிய தகவலைச் சேகரித்து அனுப்புகின்றனர். இதன் காரணமாக, இது போன்ற நூதனப் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதுவும் ஒரு கட்டத்தில் எடுபடாமல் போய்விட்டதால், சமீப காலமாக தற்கொலை மிரட்டல் நாடகங்கள் அதிகரித்துள்ளன. நில மோசடி, காதலன் கை விட்டார், கொடுத்த கடனுக்கு கொலை மிரட்டல் என, பலவிதமான காரணங்களுக்காக, தீக்குளித்துத் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டும் நபர்கள், அதிகமாகி வருகின்றனர். இவர்களில், 90 சதவீதத்துக்கும் அதிகமானோர், 'தற்கொலை' என்பதை, அதிகாரிகள் மற்றும் தங்களுக்கு எதிரான தனி நபர்களை மிரட்டவே, பயன்படுத்துகின்றனர்.
அரசு நிர்வாகத்திடம் நியாயம் கிடைக்காததால், மனம் வெறுத்து தற்கொலை செய்யத் துணியும் பலருடைய போராட்ட முயற்சியையும் இத்தகைய நபர்களின், 'மிரட்டல் நாடகங்கள்' அவமானப்படுத்துவதோடு, காவல் துறையினரைக் கடுப்பேற்றுவதாகவும் உள்ளன. இதுபோன்ற, 'தற்கொலை முயற்சி' தகவல்கள் வருவதை, போலீசாரால் உதாசீனப்படுத்த முடிவதில்லை.
நேற்றைய நாடகம்: பிச்சனூரைச் சேர்ந்த செல்வராஜ், அவரது மனைவி மல்லிகா ஆகியோர், தீக்குளித்து தற்கொலை செய்யப் போவதாக, வழக்கம்போல் பத்திரிகையாளர்களுக்குத் தகவல் வந்தது. ஏராளமான நிருபர்கள், போட்டோகிராபர்கள், போலீசார் குவிந்தனர். பகல் 11.40 மணியளவில், ரயில்வே ஸ்டேஷன் பகுதியிலிருந்து நான்கைந்து பேருடன், கலெக்டர் அலுவலகத்தை நோக்கி இவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். தலைமை தபால் தந்தி ஆபீஸ் முன்பாக, அவர்களை போலீசார் எதிர்கொண்டதும், தங்கள் கையிலிருந்த மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டனர்.
இருவரிடமிருந்தும் மண்ணெண்ணெய் கேனை பறித்த போலீசார், இருவர் மீதும் தண்ணீரை ஊற்றினர். அப்போது, அவர்களுடன் வந்தவர்கள், போலீசார் மற்றும் ஆளும்கட்சி பிரமுகர் ஒருவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கணவன், மனைவி உட்பட அங்கிருந்த 14 பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.தற்கொலைக்கு முயன்ற செல்வராஜ் கூறுகையில், ''நான் 'பைக்' வாங்குவதற்காக, ஒரு தனியார் பைனான்ஸ் கம்பெனியில் கடன் வாங்கினேன். குடும்ப கஷ்டத்தால், சில மாதங்கள் தவணை கட்ட முடியவில்லை. அந்த பைனான்ஸ் நிறுவனத்தினர், என் வீட்டுக்கு வந்து, ஆளும்கட்சி வி.ஐ.பி.,யின் பெயரைச் சொல்லி, என்னைக் கொன்று விடுவதாக மிரட்டினர். போலீசில் புகார் செய்தும் பயனில்லை. அதனால் தான், நாங்களே தற்கொலை செய்ய முயன்றோம்,'' என்றார்.
சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் மேலாளர் கூறுகையில்,''அவர் கடன் வாங்கியதிலிருந்து ஒரே ஒரு மாதம் தான் தவணை கட்டினார்; 5 மாதங்களாக கட்டவில்லை. எங்களது பிரதிநிதிகள் யாரும், எந்த அரசியல் பிரமுகரின் பெயரையும் பயன்படுத்தவில்லை; பிரச்னையை திசை திருப்ப, அவர்களாகவே அந்த பெயரைச் சொல்லியிருக்கலாம்,'' என்றார். இந்த விவகாரத்தில், ஆளும் கட்சி பிரமுகர் பெயரை இழுத்ததன் மூலமாக, பிரச்னைக்கு அரசியல் சாயம் பூசும் முயற்சி நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. மக்கள் பிரச்னைக்காக இல்லாமல், தனி நபரின் பிரச்னையை முன்னிறுத்தி நடந்த இந்த போராட்டத்தால், ஏராளமான போலீசாரின் பல மணி நேர உழைப்பு விரயமாக்கப்பட்டுள்ளது. தனிநபர் பிரச்னைகளுக்காக நடக்கும் இத்தகைய, 'தற்கொலை' நாடகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்கொலை நாடகம் போடுவோர் மீது, தயவு தாட்சண்யமின்றி தற்கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவற்றைச் செய்யாவிட்டால், 'தற்கொலை நாடகம்' என்பது தினம் நடக்கும் பகல் நேர, 'மெகா சீரியலாகி' விடும்.


