குவிகிறது நில மோசடி புகார்; அடுத்து சிக்கப் போவது யார்?
குவிகிறது நில மோசடி புகார்; அடுத்து சிக்கப் போவது யார்?
குவிகிறது நில மோசடி புகார்; அடுத்து சிக்கப் போவது யார்?
UPDATED : ஆக 12, 2011 01:02 AM
ADDED : ஆக 11, 2011 11:35 PM
திருப்பூர்:திருப்பூர் தி.மு.க., புள்ளிகள், அடுத்தடுத்து நில அபகரிப்பு வழக்கில் சிக்கி வருவதால், அடுத்தது யாராக இருக்கும்; என்ன வழக்காக இருக்கும் என கலக்கம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் பதிவாகும் நில அபகரிப்பு புகார்களில் அதிகளவு, திருப்பூர் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. இதுவரை, 264 மனுக்கள் பெறப்பட்டுள்ளன; 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.நில அபகரிப்பு புகார் குறித்து விசாரிக்கும் தனிப்பிரிவுக்கு மனுக்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், அடுத்தடுத்து, தி.மு.க., முக்கிய புள்ளிகள் சிக்கி வருகின்றனர்.
* உடுமலையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது காகித ஆலையை பறித்துக்கொண்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன், 'சன் டிவி' நிர்வாக அதிகாரி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.* வெள்ளஞ்செட்டிபாளையம் பாலாஜி செல்வமணியன் கொடுத்த நில அபகரிப்பு புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாக, திருப்பூர் தி.மு.க., நகர துணை செயலர் நாகராஜன் கைது செய்யப்பட்டார். நாகராஜ், திருப்பூர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ரமேஷ் மனைவி நந்தினியை தனி அறையில் வைத்து மிரட்டியதாக கொடுக்கப்பட்ட இரண்டாவது வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.* கட்டப்பஞ்சாயத்து மற்றும் பணம் தராமல் மிரட்டியதாக, தஞ்சாவூர் பெருவூரணியைச் சேர்ந்த சுரேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், 'கலைஞர் பேரவை' மாநில துணை செயலர் மற்றும் எல்.பி.எப்., மாவட்ட துணை செயலர் தம்பி குமாரசாமி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.* பொங்கலூர் முன்னாள் எம்.எல்.ஏ., மணி மற்றும் அவரது உதவியாளர் மீது வந்த புகாரிலும் விசாரணை நடந்து வருகிறது. 'கலைஞர் பேரவை' மாநில அமைப்பாளர் நாகராஜ் மீதும் புகார் பதிவாகியுள்ளது.* திருப்பூர் மாநகராட்சி மேயர் செல்வராஜ் (தி.மு.க.,) மீது, சாமாத்தாள் என்பவர், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் பங்களாவை அபகரித்துக் கொண்டதாக கொடுத்த புகாரில், வழக்கு பதிவு செய்து, மேயரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். எந்நேரமும் மேயர் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் பதிவாகியுள்ள வழக்குகளில், மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள, 22 தி.மு.க., முக்கிய புள்ளிகளை சிறைக்கு அனுப்ப போலீசார் தயாராகியுள்ளனர்.திருப்பூர் மாநகர நிர்வாகிகளில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம், நில அபகரிப்பில் ஈடுபட்ட மேலும் பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், பட்டியலை ரகசியமாக வைத்துள்ளனர். வழக்குக்கு தேவையான, முழுமையான ஆதாரங்களை திரட்டிய பிறகே, கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.விஷயம் வெளியே கசிந்து, தி.மு.க.,வினர், 'அலர்ட்' ஆகாமல் இருக்கும் வகையில், நில அபகரிப்பு புகார்கள் மிகவும் ரகசியமாக கையாளப்படுகின்றன.
அ.தி.மு.க.,வினர்சிக்குவார்களா?நில அபகரிப்பு வழக்கில் சிக்கியுள்ள மேயர் செல்வராஜ் நிருபர்களிடம் பேசியபோது, அ.தி.மு.க., கவுன்சிலர் முருகசாமியை கை காட்டியதோடு, அவரையும் விசாரிக்க வேண்டும் என, பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனால், தி.மு.க.,வினருடன் ரகசியமாக உறவை தொடர்ந்து வரும் அ.தி.மு.க.,வினர் கலக்கம் அடைந்துள்ளனர்.சில புகார்களில், நேரடியாக அ.தி.மு.க.,வினரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், அ.தி.மு.க.,வினரும் உறைந்து போயுள்ளனர்.