Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில்சிங்களர்கள் குடியேற்றம் தீவிரம் மனித உரிமை ஆர்வலர் ஆதங்கம்

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில்சிங்களர்கள் குடியேற்றம் தீவிரம் மனித உரிமை ஆர்வலர் ஆதங்கம்

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில்சிங்களர்கள் குடியேற்றம் தீவிரம் மனித உரிமை ஆர்வலர் ஆதங்கம்

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில்சிங்களர்கள் குடியேற்றம் தீவிரம் மனித உரிமை ஆர்வலர் ஆதங்கம்

ADDED : ஜூலை 30, 2011 02:20 AM


Google News
திருநெல்வேலி:இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மனித உரிமை ஆர்வலர் வக்கீல் பிரிட்டோ தெரிவித்தார்.இது குறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது;கடந்த 11ம்தேதி முதல்17ம்தேதி வரை இலங்கை போரில் பாதிக்கப்ட்ட தமிழர்கள் வசிக்கும் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களில் சென்று கள ஆய்வு செய்தேன்.தமிழர் பகுதிகளில் தொடர்ந்து ராணுவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு சுமார் ஒன்றரை லட்சம் ராணுவ வீரர்கள் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் 300 முதல் 400 மீட்டருக்கு ஒரு சோதனை அமைத்து வாகனங்களை தணிக்கை செய்வதோடு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். 24மணி நேரமும் ராணுவத்தின் கண்காணிப்பில் தமிழர்கள் வாழும் சூழ்நிலை உள்ளது.இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகும் அதிகளவில் கட்டுப்பாடுகளை தமிழர்கள் பின்பற்ற வேண்டியுள்ளது. தமிழர்களின் நிலம், தோட்டம், வீடு போன்றவற்றை ராணுவத்தினர் தங்களுக்கு சொந்தமாக மாற்றி வருகின்றனர்.இலங்கை அரசு தமிழர்கள் மறு குடியமர்த்தப்பட்டு வருவதாக கூறுகிறது. ஆனால் செட்டிகுளம் முகாமில் இன்னும் 60 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை உள்ளது. இலங்கை ராணுவத்தினர் தமிழர்கள் பகுதியில் 3மாதத்திற்கு ஒரு முறை புதிய நபர்கள் குடும்பத்தில் சேர்ந்துள்ளனரா கண்காணித்து வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். கடைசி கட்ட போரில் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள், மேற்கூரை சேதமடைந்த வீடுகளில் இளம்பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் தங்க வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் இளைஞர்களை காண முடியவில்லை. இதனால் இளம்பெண்கள் ராணுவத்தினரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகின்றனர். மேலும் தமிழர் வசிக்கும் வட பகுதிகளான கிளிநொச்சி, முருகண்டி, மாங்காடு பகுதிகளில் இலங்கை அரசு சிங்களர்களை குடியேற்றம் செய்யும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முக்கிய நகரங்களில் புத்தர் சிலைகளை ஆங்காங்கே அமைத்து வருகிறது. தமிழர்கள் சிங்கள மொழியை கற்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர். கிளிநொச்சி, ஆனையிறவு பகுதியில் இலங்கை ராணுவம் வெற்றி சின்னங்களை வைத்து தமிழர்களை அவமானப்படுத்தி வருகிறது. இப்பகுதியில் தமிழர்கள் சிறிய கடைகள் நடத்த கூட அனுமதி இல்லாததால் வறுமையில் வாடி வருகின்றனர். இறுதி கட்ட போர் நடந்த பகுதியில் ராணுவ கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. இப்பகுதியில் வசித்த தமிழர்களை துணை ராணுவத்தினர் கடத்தி சென்றனர். இவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

அனைத்து தமிழக குடும்பங்களிலும் குறைந்த 2முதல் 6பேரை உயிர் இழந்துள்ளனர். தமிழர் முகாமில் நிறைய பேர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் 89 ஆயிரம் பேர் விதவைகளாக உள்ளனர். இதில்40 வயதிற்குட்பட்டவர்கள் 12ஆயிரம் பேர் என்பது தெரிய வந்துள்ளது. தமிழக அரசு இலங்கைக்கு பொருளாதார தடைவிக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது இலங்கை தமிழர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இலங்கை தமிழர்கள் மறுவாழ்விற்காக திரட்டிய பரிந்துரைகள் மற்றும் இலங்கை போர் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். காணாமல் போன தமிழர்களின் பட்டியலை வெளியிட வேண்டும், சிங்களர் குடியேற்றத்தை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் உதவியுடன் மத்திய அரசிடம் வழங்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு மனித உரிமை ஆர்வலர் பிரிட்டோ தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us