ADDED : செப் 01, 2011 01:39 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மனைவி நல வேட்பு விழா நடந்தது.
விழாவுக்கு ஓய்வு பெற்ற உதவி கல்வி அலுவலர் ஜெயராமன்-மணிமேகலை தம்பதியினர் தலைமை வகித்தனர்.
மனவளக்கலை மன்ற செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். மனவளக்கலை பேராசிரியர் சுந்தரேசன் பேசியதாவது: சிந்தனையாளர்கள், அறிஞர்கள், மனவளக்கலை கலைஞர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கூடி பெண்மையை போற்றும் நிகழ்ச்சி மனைவி நல வேட்பு விழாவாகும். சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் மூன்றையும் உள்ளடக்கி கொண்டாடும் விழாவும் இதுதான்.
தனி மனித அமைதிக்கு மகரிஷி வடிவமைத்த யோகப்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. குடும்ப அமைதியில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியம். அவர்களை மதித்து போற்ற வேண்டும். வெற்றி பெற்ற ஆண்கள் பெரும்பாலானோர், மனைவியை மதித்து போற்றியவர்களே. எனவே, ஒவ்வொரு கணவனும், தனது மனைவியை போற்றி வணங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
திருச்சி தேசிய கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் நீலகண்டன், மனவளக்கலை துணை பேராசிரியர் கிருஷ்ணவேணி, செயற்குழு உறுப்பினர்கள் விஜயபாஸ்கரன், சுந்தரராஜபெருமாள் உட்பட தம்பதியினர் பலர் பங்கேற்றனர்.