நரேந்திர மோடி இன்று உண்ணாவிரதம்: அ.தி.மு.க., சார்பில் எம்.பி.,க்கள் பங்கேற்பு
நரேந்திர மோடி இன்று உண்ணாவிரதம்: அ.தி.மு.க., சார்பில் எம்.பி.,க்கள் பங்கேற்பு
நரேந்திர மோடி இன்று உண்ணாவிரதம்: அ.தி.மு.க., சார்பில் எம்.பி.,க்கள் பங்கேற்பு

ஆமதாபாத்: அமைதி, ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, குஜராத் முதல்வர் மோடி, இன்று முதல் மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்.
குஜராத் வன்முறை வழக்கில், சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, முதல்வர் நரேந்திர மோடிக்கு, நிவாரணம் அளிப்பதாக இருந்தது. இதையடுத்து, மாநிலத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, இன்று முதல் மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, முதல்வர் மோடி அறிவித்தார். ஆமதாபாத் நகரில், குஜராத் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்தில், மோடியுடன் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி, பா.ஜ., முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங், நடிகை ஹேமமாலினி உட்பட பலர் பங்கேற்கின்றனர். மோடியின் உண்ணாவிரதத்திற்கு, பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சியான சிரோன்மணி அகாலிதளத்தின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சிவசேனா தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதத்தில், மோடியுடன் பங்கேற்க, அ.தி.மு.க., எம்.பி.,க்கள் தம்பிதுரை மற்றும் மைத்ரேயனை, முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் இடையே, நல்ல நட்புறவு உள்ளது. ஜெயலலிதா கடந்த மே மாதம் தமிழக முதல்வராகப் பதவியேற்ற போது, அந்த விழாவில் மோடி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.