ADDED : ஜூலை 12, 2011 11:26 PM

புதுடில்லி: 'அடுத்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்யக் கூடாது என, நினைக்கிறேன். இது கடைசி மாற்றமாக இருக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றத்துக்கு பின், பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டி: வரும், 2014ல் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு முன், அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் எதுவும் செய்யக் கூடாது என்பது என் விருப்பம். இது தான் கடைசி மாற்றமாக இருக்கும் என, நம்புகிறேன். இலாகாக்களை மாற்றி அமைப்பதில் சில பிரச்னைகள் இருந்தன. இதில், நாட்டு நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியான தி.மு.க.,வுக்கு அளிக்க வேண்டிய இரண்டு இடங்கள் காலியாக வைக்கப்படும். இது கூட்டணி தர்மம். இதுபற்றிய தி.மு.க.,வின் முடிவு, விரைவில் அறிவிக்கப்படும் என, நம்புகிறேன். தற்போது மத்திய அரசுக்கு சில பிரச்னைகள் உள்ளன. இப்பிரச்னையில் இருந்து மீள்வோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜெய்ராம் ரமேஷின் துறை மாற்றப்பட்டது குறித்து கேட்கப்படுகிறது. தற்போது அவருக்கு, அதிக முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரின் அனுபவம், நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
ராகுலுக்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என, கேட்கப்படுகிறது. அமைச்சரவையில் சேரும்படி, அவரை பலமுறை வற்புறுத்தி விட்டேன். ஆனால், கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டப் போவதாக அவர் கூறுகிறார். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
குருதாஸ் காமத் ராஜினாமா : மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த குருதாஸ் காமத், உள்துறை இணை அமைச்சராக இருந்தார். தனக்கு கேபினட் அமைச்சர் பதவி தரப்படும் என, அவர் எதிர்பார்த்தார். நேற்று காலை அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவை பட்டியலில், குருதாஸ் காமத், உள்துறை இணை அமைச்சர் பதவியில் இருந்து, குடிநீர் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) பதவிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், காமத் அதிருப்தி அடைந்தார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவது இல்லை என்றும், அவர் தரப்பில் இருந்து செய்தி வெளியானது. இதற்கு காங்., மேலிடத்திடம் இருந்து, கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருந்தாலும், மாலையில் நடந்த பதவியேற்பு விழாவை, காமத் புறக்கணித்தார். பதவியேற்பு விழா முடிந்தபின், தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ''இலாகா மாற்றத்தால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, பதவியை ராஜினாமா செய்யவில்லை. சொந்த பிரச்னை காரணமாக ராஜினாமா செய்துள்ளேன். காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் மீது, மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். ராஜினாமா கடிதத்தை, பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளேன்'' என, அறிக்கை வெளியிட்டு இருந்தார்.


