Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிப்பு : கூடுதல் இழப்பீடு கேட்ட மனு தள்ளுபடி

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிப்பு : கூடுதல் இழப்பீடு கேட்ட மனு தள்ளுபடி

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிப்பு : கூடுதல் இழப்பீடு கேட்ட மனு தள்ளுபடி

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிப்பு : கூடுதல் இழப்பீடு கேட்ட மனு தள்ளுபடி

ADDED : செப் 26, 2011 11:48 PM


Google News
Latest Tamil News

புதுடில்லி : 'கும்பகோணம் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

கடந்த 2004ம் ஆண்டில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், ஸ்ரீகிருஷ்ணா ஆரம்ப பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியாகினர்.

18க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இந்தத் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கத்தின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

தீ விபத்து நிகழ்ந்து ஆறரை ஆண்டுகளுக்கு மேலாகியும், இறந்த குழந்தைகளின் உறவினர்களுக்கும், காயமடைந்த குழந்தைகளுக்கும் போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை. இதன் மூலம் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மாணவர்களின் மறுவாழ்விற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற சீரமைப்பு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

தீ விபத்து சம்பவம் நிகழ்ந்தவுடன், இறந்த குழந்தைகளின் உறவினர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. அதன்பின், அவர்களுக்கு இழப்பீடு வழங்கவோ அல்லது மருத்துவ வசதிகள் அளிக்கவோ, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.

இந்த மனுவுக்கு பதில் அளித்த தமிழக அரசு, 'தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு 45 லட்ச ரூபாய் தரப்பட்டுள்ளது. 54 குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு, அரசு செலவில் மருத்துவ வசதி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மனுவை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் நேற்று விசாரித்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ''தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக, எந்த வகையிலான இழப்பீடு கொடுத்தாலும், அது உயிருக்கு இணையாகாது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

அதே நேரத்தில், தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us