Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சக ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் 'டெட்' தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள்

சக ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் 'டெட்' தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள்

சக ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் 'டெட்' தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள்

சக ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் 'டெட்' தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள்

ADDED : செப் 18, 2025 06:41 AM


Google News
Latest Tamil News
சென்னை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள், சக ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன், தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ன்படி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த சட்டம், தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து, 'டெட்' தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, ஆசிரியராக நியமிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றால் பணியை தொடரலாம். இல்லையெனில், கட்டாய ஓய்வில் செல்லலாம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனால், தமிழகத்தில் பணியில் உள்ள, 1.75 லட்சம் ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஆசிரியர் தேர்வு வாரியத்தால், நவம்பர் 15, 16ம் தேதிகளில் நடக்க உள்ள, 'டெட்' தேர்வுக்கு, இதுவரை இல்லாத வகையில், 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக, பணியில் உள்ள லட்சக்கணக்கான ஆசிரியர்களும், 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஏற்கனவே, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு பள்ளிகளில் பணியாற்றும் சக ஆசிரியர்கள், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

தேர்வு மாதிரி வினாக்கள், பழைய வினாக்கள் போன்றவற்றை, 'வாட்ஸாப்' குழுக்களில் பகிர்ந்து வழிகாட்டி வருகின்றனர். சில ஆசிரியர்கள், தனியார் 'கோச்சிங்' சென்டர்களில் பணம் செலுத்தி, 'ஆன்லைன்' வழியே பயிற்சி பெற்று வருகின்றனர்.

சிறப்பு தேர்வுக்கு எதிர்ப்பு



கடந்த, 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தின், மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறியதாவது: நாங்கள் ஆசிரியர்களுக்கு எதிரானவர்கள் இல்லை. ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்வு நடத்தலாம். அரசு பயிற்சி வழங்கலாம்.

அதேநேரம், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டும், தமிழக அரசு சிறப்பு 'டெட்' தேர்வு நடத்தினால், அந்த தேர்வுக்கான நோக்கமே சீரழிந்துவிடும். எங்கள் அடையாளம் அழிந்துவிடும். ஆசிரியர்கள், தப்பிப்பதற்கு தேர்வு நடத்தினால், அதை நாங்கள் வன்மையாக கண்டிப்போம்.

நாங்கள் விரும்பியபடி, ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு, உருப்படியாக எதுவும் செய்யவில்லை. தேர்தல் அறிக்கையை மறந்துவிட்டது.இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us