உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியா?
உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியா?
உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியா?

சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின், முதன் முறையாக பா.ம.க.,வின் பொதுக்குழுக் கூட்டம், சென்னையில் வரும் 27ம் தேதி கூடுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி வேண்டுமா? வேண்டாமா? என்ற தலைப்பில், ஒரு குட்டி பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு, பொதுக்குழு உறுப்பினர்களிடம் கருத்துகளை கேட்டறிய, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். அவரை பொறுத்தவரை, தி.மு.க., கூட்டணியிலிருந்து, அவசரப்பட்டு விலக வேண்டாம் என கருதுகிறார்.அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து தே.மு.தி.க., ஏதாவது பிரச்னையின் அடிப்படையில் வெளியேறும் போது, தி.மு.க., கூட்டணியிலிருந்து பா.ம.க., வெளியேறுவது குறித்த முடிவு எடுக்கலாம் என்ற தொலைநோக்கு திட்டத்தையும் அவர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தனது மகன் அன்புமணியை, 'அடுத்த வாரிசாக' கட்சியில் மகுடம் சூட்ட வேண்டும். வன்னியர் சங்கத் தலைவர் குரு எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்களால் அன்புமணிக்கு எதிர்ப்பு வரக்கூடாது என்பதிலும், ராமதாஸ் மிகவும் கவனமாக இருக்கிறார். அதனால் தான், பா.ம.க., தலைவர் ஜி.கே.மணிக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் இருவரை, கட்சியிலிருந்து அதிரடியாக ராமதாஸ் நீக்கினார்.உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., கூட்டணி வேண்டாம்; பென்னாகரம் இடைத்தேர்தல் பார்முலாவில் உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து, தன் கட்சியின் பலத்தையும், ஓட்டு வங்கியையும் நிரூபிக்க வேண்டும். அப்போது தான், அடுத்த லோக்சபா தேர்தலில், திராவிடக் கட்சிகளுடன் பேரம் பேசி அதிக சீட்டுகளைப் பெற முடியும் என, அன்புமணி கருதுகிறார்.
விடுதலை சிறுத்தைகளுடன் பா.ம.க., கைகோர்த்ததையும் வன்னியர் சமுதாயத்தினரும், மற்ற சமுதாயத்தினரும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே பொருந்தாக் கூட்டணியாக இருப்பதால், தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகுவது தான் சரியான முடிவாக இருக்கும் என, அன்புமணி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
தி.மு.க.,வைப் பொறுத்தவரை, பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய இரண்டில் ஒரு கட்சி மட்டும் கூட்டணியில் இருந்தால் போதும் என்று நினைக்கிறது. அது எந்தக் கட்சி என்ற முடிவை, தேர்தல் நேரத்தில் எடுத்துக் கொள்ள விரும்புகிறது. வட மாவட்டங்களில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் செல்வாக்கு பெற்ற இடங்களில் கூட தி.மு.க., வெற்றி பெறவில்லை.அதேபோல், காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பா.ம.க.,வால் எந்த பலனும் இல்லை. தென் மாவட்டங்களிலும் பா.ம.க.,வுக்கு ஓட்டு வங்கிகளே கிடையாது. எனவே, அக்கட்சியை தாங்கிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை என, தி.மு.க., தரப்பில் கருதப்படுகிறது.
-நமது சிறப்பு நிருபர்-