தொல்லை தரும் அழைப்புகள்: சேவை நிறுவனங்களுக்கு விலக்கு
தொல்லை தரும் அழைப்புகள்: சேவை நிறுவனங்களுக்கு விலக்கு
தொல்லை தரும் அழைப்புகள்: சேவை நிறுவனங்களுக்கு விலக்கு
புதுடில்லி:ஒரு சிம் கார்டுக்கு, ஒரு நாளைக்கு நூறு எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்பக் கூடாது என்ற கட்டுப்பாட்டில் இருந்து, இ-டிக்கெட் ஏஜன்சி, சமூக வளைத் தளங்கள் உள்ளிட்ட, சில அமைப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் மொபைல் போன்களுக்கு வரும், வர்த்தக ரீதியிலான தொல்லை தரும் அழைப்புகளுக்கும், எஸ்.எம்.எஸ்.,களுக்கும், நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், தங்கள் எண்களை பதிவு செய்து கொண்டால், அவர்களுக்கு, தொல்லை தரும் அழைப்புகள் வராது என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒரு சிம் கார்டுக்கு, ஒரு நாளைக்கு நூறு எஸ்.எம். எஸ்.,களுக்கு மேல் அனுப்ப, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஆபரேட்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இந்த விஷயத்தில் குழப்பம் நிலவியது.
இதைத் தொடர்ந்து, டிராய் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், 'தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் டீலர்கள், டி.டி.எச்., ஆபரேட்டர்கள், இ-டிக்கெட்டிங் ஏஜன்சிகள், சமூக வளைத் தள இணையதளங்கள் உள்ளிட்டவற்றுக்கு, ஒரு சிம் கார்டுக்கு, ஒரு நாளைக்கு நூறு எஸ்.எம்.எஸ்., என்ற கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டுப்பாடு, விழாக் காலங்களுக்கு பொருந்தாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தொல்லை தரும் அழைப்புகளுக்கு தடை விதிக்கும் திட்டம், டில்லியில் நேற்று முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல், 'தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவேட்டில், தங்கள் எண்களை பதிவு செய்துள்ளவர்களுக்கு இனிமேல் வர்த்தக ரீதியிலான தொல்லை தரும் அழைப்புகள் வராது' என்றார்.
டிராய் தலைவர் ஜே.எஸ்.சர்மா கூறுகையில், 'தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறும் ஆபரேட்டர்களுக்கு, 2.5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களின் சேவையை திரும்ப பெறும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். அடுத்த மாதம் 15ம் தேதி முதல், வர்த்தக ரீதியிலான எஸ்.எம்.எஸ்.,களுக்கு, தலா ஐந்து பைசா, வரி விதிப்பது என, திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.