ADDED : ஆக 03, 2011 10:30 PM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி 13வது வார்டு கோல்டன் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
மக்கள் அடர்த்தி மிகுந்த இப்பகுதியில், சிறு, குறு வர்த்தக நிறுவனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றன. வீட்டுக்கழிவுகள், வர்த்தக நிறுவன கழிவுகள் என நாளொன்றுக்கு அதிகளவு கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. ஆனால், சேகரமாகும் குப்பையை கொட்டுவதற்கு, இப்பகுதியில் குப்பைத்தொட்டி வைக்கப்படவில்லை.கோல்டன் நகர் பகுதி பொதுமக்கள், கடைகள் வைத்திருப்போர், சாக்கடை கால்வாய்களிலும், ரோட்டோரத்திலும் கழிவுகளை கொட்டி வருகின்றனர். வீட்டுக்கழிவுகள், கடைகளில் இருந்து கொட்டப்படும் காய்கறி கழிவு, மெடிக்கல் ஸ்டோர்ஸ்களில் இருந்து வீசப்படும் மருத்துவ கழிவுகளால் கோல்டன் நகர், கருணாபுரி, கணேசபுரம் பகுதி சாக்கடை கால்வாய்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.இப்பகுதியில் இறைச்சி கடை வைத்திருப்போரும் கழிவுகளை முறையாக அகற்றுவது இல்லை; சாக்கடை கால்வாயிலும், ரோட்டிலுமே வீசி எறிகின்றனர். பல தரப்பட்ட கழிவுகளின் தேக்கத்தால், கோல்டன் நகர் முழுவதும் எப்போதும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது; ரோட்டை பயன்படுத்த பாதசாரிகளுக்கு அருவருப்பு ஏற்படுகிறது.மழை காலங்களில், கழிவுகளுடன் மழைநீர் சேர்ந்து ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து தடைபடுவதோடு, பொதுமக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது; நோய் தாக்கும் அபாயமும் உள்ளது. குடியிருப்புகள் நிறைந்த கோல்டன் நகரில், கழிவுகளை சேகரிக்க குப்பை தொட்டி வைக்க வேண்டும். சாக்கடை கால்வாயில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளை அப்புறப்படுத்தி, முறையாக கொசு மருந்து அடிக்க வேண்டும்.