நெகிழ வைத்தார் எம்.எல்.ஏ.,! : மகிழ வைத்தார் முதல்வர்
நெகிழ வைத்தார் எம்.எல்.ஏ.,! : மகிழ வைத்தார் முதல்வர்
நெகிழ வைத்தார் எம்.எல்.ஏ.,! : மகிழ வைத்தார் முதல்வர்
ADDED : செப் 07, 2011 11:50 PM
சென்னை: கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க., உறுப்பினர் காமராஜ், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு மாதச் சம்பளம், பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாதச் சம்பளம், மன நல காப்பகத்திற்கு ஒரு மாதச் சம்பளம் என, மூன்று மாத சம்பளத்தையும் வழங்கியதாக, சட்டசபையில் தெரிவித்தார். இவரின் செயலை, முதல்வர் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
சட்டசபையில், காமராஜ் நேற்று பேசியதாவது: கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள செம்பிநத்தம் கிராமத்தில் பூமிராஜன் என்பவர் குடும்பம், தீ விபத்தால் பாதிக்கப்பட்டு, மனைவி மற்றும் மூத்த மகளும் பலியான நிலையில், இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு பூமிராஜன் கஷ்டப்பட்டு வருகிறார். அந்தக் குடும்பத்திற்கு, எனது முதல் மாத சம்பளத்தை (50 ஆயிரம் ரூபாய்) வழங்கினேன். இரண்டாவது மாத சம்பளத்தை, ஏழை, எளிய பள்ளி மாணவர்களுக்காக வழங்கினேன். மூன்றாவது மாத சம்பளத்தை, கரூரில் உள்ள ஒரு மன நல காப்பகத்திற்கு (செயின்ட் ஆன்டனிஸ் மன நல காப்பகம்) வழங்கினேன். தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி செய்ய வேண்டும். இவ்வாறு காமராஜ் பேசினார்.
உடனே, 'தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதுவரை பெற்ற மூன்று மாத சம்பளத்தையும், சேவை நோக்கத்துடன் மற்றவர்களுக்கு வழங்கியது குறித்து உறுப்பினர் அறிவித்தபோது, உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி பாராட்டினர். தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவியதற்காக, முதல்வரின் காலில் விழுந்து காமராஜ் நன்றி தெரிவித்தார்.