"15ம் தேதி இரவு 8 முதல் 9 வரை மின் விளக்குகளை அணையுங்கள்'
"15ம் தேதி இரவு 8 முதல் 9 வரை மின் விளக்குகளை அணையுங்கள்'
"15ம் தேதி இரவு 8 முதல் 9 வரை மின் விளக்குகளை அணையுங்கள்'
UPDATED : ஆக 12, 2011 01:05 AM
ADDED : ஆக 11, 2011 11:42 PM

புதுடில்லி: ''வரும் 15ம் தேதி இரவு 8 மணி முதல் ஒன்பது மணி வரை, நாட்டு மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து விட்டு, தீபஒளி ஏற்ற வேண்டும்,'' என, ஹசாரே குழுவினர் அழைப்பு விடுத்துள்ளார்.
அன்னா ஹசாரே குழுவினரின் உயர்மட்டக் குழு கூட்டம், டில்லியில் நேற்று காலை நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பின், குழு உறுப்பினர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: வலிமையான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, வரும் 16ம் தேதி முதல், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் துவங்கும். நாங்கள் உண்ணாவிரதம் நடத்த, டில்லி ஜெயப்பிரகாஷ் நாராயணன் பார்க் அருகே, பெரோஸ்ஷா கோட்லா ஸ்டேடியத்தை போலீசார் எங்களுக்கு ஒதுக்கியுள்ளனர். அவர்கள் ஒதுக்கியுள்ள இடம், திருப்தி அளிக்கிறது. அது நல்ல இடமே. எங்களின் கோரிக்கைகளில் இருந்து பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை, நாங்கள் யாருடனும் சமாதானம் செய்து கொள்ள மாட்டோம்.
லோக்பால் மசோதா விவகாரம் தொடர்பாக, அரசு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், எங்களுக்கு அழைப்பு எதுவும் வரவில்லை. ஊழல், ஏழ்மை மற்றும் எழுத்தறிவின்மையால் நமக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை. எனவே, இதை உணர்த்தும் வகையில், வரும் 15ம் தேதி இரவு 8 மணி முதல் ஒன்பது மணி வரை, நாட்டு மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து விட்டு, தீப ஒளி ஏற்ற வேண்டும். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.