ஆங்கில வழி சமச்சீர் புத்தகம் பற்றாக்குறை : தனியார் பள்ளிகள் தவிப்பு
ஆங்கில வழி சமச்சீர் புத்தகம் பற்றாக்குறை : தனியார் பள்ளிகள் தவிப்பு
ஆங்கில வழி சமச்சீர் புத்தகம் பற்றாக்குறை : தனியார் பள்ளிகள் தவிப்பு
சேலம் : சமச்சீர் கல்வி ஆங்கில வழிப்பாடப் புத்தகங்களில், ஒரு சில பாடப்புத்தகங்கள் பற்றாக்குறையால், மாணவ, மாணவியருக்கு அனைத்து புத்தகங்களும் வழங்க முடியாத நிலை காணப்படுகிறது.
கடந்த ஆண்டில் தமிழக அரசு, தனியார் பதிப்பகங்களுக்கும் சமச்சீர் கல்வி புத்தகம் தயாரிக்க, அனுமதி வழங்கியது. பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் வெளியிட்ட புத்தகத்தை வாங்க விரும்பாமல், தனியார் பதிப்பகங்களிடம் புத்தகங்களை, கொள்முதல் செய்தன. இதை கணக்கில் கொண்டு, நடப்பாண்டில் ஆங்கில வழிப் பாடப் புத்தகங்கள் குறைந்த அளவே அச்சிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், சமச்சீர் கல்வி குறித்த குழப்பத்தால், தனியார் பதிப்பகங்கள் புத்தக உற்பத்தியில் இறங்கவில்லை. இதனால், மெட்ரிக் பள்ளிகளுக்கு போதிய அளவுக்கு தனியார் பதிப்பக புத்தகங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, பெரும்பாலான சுயநிதி பள்ளிகள், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தையே புத்தகங்களுக்கு அணுகியுள்ளன.
இதில், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப் புத்தகங்கள் பற்றாக்குறை காரணமாக, அரசு பள்ளிகளில் படிக்கும் ஆங்கில வழி மாணவ, மாணவியருக்கு கூட, முழுமையாக புத்தகங்கள் வழங்கவில்லை. 'பற்றாக்குறையுள்ள பாடப் புத்தகங்கள், ஒரு சில நாட்களில் வழங்கப்படும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் குடோன்களில் கூட, ஆங்கில வழி நூல்கள் விற்பனையில், இப்புத்தகங்கள் பற்றாக்குறையாகவே உள்ளன. ஒரு சில பாடப்புத்தகம் பற்றாக்குறையால், மற்ற புத்தகங்கள் பெறவும் சுயநிதி பள்ளிகள் தயக்கம் காட்டுகின்றன. இதனால், தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றில், புத்தகம் வழங்கப்படாத நிலை தொடர்கிறது.