வெடி தயாரிக்கும் குடோனில் வெடி விபத்து: திருச்சி அருகே இருவர் பலி: இருவர் காயம்
வெடி தயாரிக்கும் குடோனில் வெடி விபத்து: திருச்சி அருகே இருவர் பலி: இருவர் காயம்
வெடி தயாரிக்கும் குடோனில் வெடி விபத்து: திருச்சி அருகே இருவர் பலி: இருவர் காயம்
திருச்சி: திருச்சி அருகே, வாண வேடிக்கை தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில், இருவர் பலியாயினர்.
திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் குத்புதின்,35. இவர், திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாண வேடிக்கை வெடி தயாரித்து, லைசன்ஸ் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று மாலை ஐந்து மணியளவில், லால்குடியில் வெடி தயாரிக்க, கந்தகம் (சல்பர்), வெடி உப்பு ஆகியவற்றுடன், டெக்ஸ்மோ மோட்டார் ஒன்றையும் வாங்கிக் கொண்டு, ஒரு டாடா ஏஸ் லோடு ஆட்டோவில், குத்புதின், தன் குடோனுக்குச் சென்றார். ஆட்டோவை கண்ணன்,30, என்பவர் ஓட்டினார். லால்குடி சந்தைப்பேட்டை அடுத்துள்ள உமர் நகரில் உள்ள குடோனுக்கு ஆட்டோ சென்றவுடன், குத்புதினிடம் பணியாற்றும் செந்தில்குமார், கந்தகத்தை இறக்க முயன்றபோது, கை தவறி கீழே கொட்டி விட்டது. கந்தகம் அதிக வெப்பத் தன்மை கொண்டது என்பதால், உடனடியாக தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. தீ, ஆட்டோவில் இருந்த வெடி உப்பு மற்றும் குடோனில் இருந்த வெடிகளுக்கும் பரவியதால், பலத்த சத்தத்துடன் வெடித்தது. வெடி விபத்தில் குத்புதின், அவரிடம் வேலை பார்த்த செந்தில்குமார், டாடா ஏஸ் டிரைவர் கண்ணன், டெக்ஸ்மோ மோட்டாரை பொருத்த வந்த சங்கர் என்ற வாலிபர் ஆகிய நால்வரும் படுகாயமடைந்தனர். கால் முறிந்த சங்கர், லால்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
வெடி விபத்தில் பலத்த காயமடைந்த குத்புதின், செந்தில்குமார், கண்ணன் ஆகிய மூவரும், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு, இரவு எட்டு மணியளவில் குத்புதின், கண்ணன் ஆகிய இருவரும், பரிதாபமாக உயிரிழந்தனர். செந்தில்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். குத்புதின் கந்தகம், வெடி உப்பு ஆகியவற்றை எங்கிருந்து வாங்கி வந்தார், அவர் தன்னுடைய குடோனில் அனுமதிக்கப்பட்ட அளவில் தான் வெடி பொருட்களையும், அது தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களையும் வைத்திருந்தாரா என்பது குறித்து, லால்குடி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். திடீரென ஏற்பட்ட வெடி விபத்து, லால்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.