அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி
அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி
அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி

ஸ்ரீநகர்: பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் தண்டனையை குறைக்க வலியுறுத்தும் தீர்மானம் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் இன்று தாக்கலாகவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.,வினர் அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் பலியானார்கள். இந்த தாக்குதலை லஷ்கர் இ தொய்பாவும், ஜெய்ஷே முகமது பயங்கரவாத அமைப்புகளும் இணைந்து செயல்படுத்தின. இதனிடையே இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட அப்சல் குருவுக்கு கடந்த 2004ம் ஆண்டு மரணதண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தனது மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி, அப்சல் குருவால் அனுப்பப்பட்ட கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் தண்டனையை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்சல் குருவுக்கு ஆதரவாக இதே போன்றவொரு தீர்மானம் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் கொண்டுவரப்படும் என அம்மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த தீர்மானம் இன்று சட்டசபையில் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளிக்கப்போவதாக மக்கள் ஜனநாயக கட்சியும், எதிர்க்கப்போவதாக பா.ஜ.,வும்கூறிவந்தன. தீர்மானத்தின் மீது மனசாட்சிப்படி ஓட்டளிக்குமாறு தனது உறுப்பினர்களை தேசிய மாநாட்டு கட்சிகேட்டுக்கொண்டது. இந்நிலையில், இன்று காலை சட்டசபை கூடியதும், தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பா.ஜ., உறுப்பினர்கள் வெளியேற்றுமாறு காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டதால், அவையில் பரபரப்பு நிலவியது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.