ADDED : ஆக 01, 2011 11:14 PM

ராமேஸ்வரம்: பாம்பன் வடகடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் வலையில், நேற்று அரியவகை சுறா மீன் சிக்கியது.
வழக்கமாக பிடிபடும் சுறா மீன் போல் இல்லாமல், மேல் பகுதி இளம் பழுப்பு நிறத்தில் வித்தியாசமாக இருந்ததை கண்ட மீனவர்கள் கரை திரும்பியதும், மண்டபத்திலுள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பிடிபட்ட மீன், மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் அரிதாக காணப்படும் கங்கை சுறா வகையை சேர்ந்தது என, கூறப்படுகிறது. இரண்டு மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது என்றாலும், பிடிபட்ட சுறாமீன் ஒன்றரை அடி நீளம், இரண்டரை கிலோ எடையுடன் இருந்தது. கடல்மீன் ஆராயச்சி நிலைய அதிகாரிகள் சுறாவை கைப்பற்றி, ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு சென்றனர்.