Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சோனியாவை சந்தித்தார் கருணாநிதியின் தூதர்

சோனியாவை சந்தித்தார் கருணாநிதியின் தூதர்

சோனியாவை சந்தித்தார் கருணாநிதியின் தூதர்

சோனியாவை சந்தித்தார் கருணாநிதியின் தூதர்

UPDATED : செப் 24, 2011 12:05 AMADDED : செப் 23, 2011 11:19 PM


Google News
Latest Tamil News
உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., தனித்துப்போட்டி, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தின் மீது குற்றச்சாட்டு என்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் தூதர் டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான, வழக்கமான சந்திப்புதான் என்று கூறப்பட்டாலும், கனிமொழிக்கு ஜாமின் பெறும் நோக்கில் தீவிரமாக தி.மு.க., இறங்கியுள்ள நிலையில், சோனியாவை, கருணாநிதியின் தூதர் சந்தித்து இருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக தற்போது ஓய்வில் உள்ளார். அவர், கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி அன்று திடீரென அமெரிக்காவுக்கு சென்றார். அமெரிக்காவில், சோனியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 8ம் தேதி, சோனியா டில்லி திரும்பினார். எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கூட அவர் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இடையில் ஒரு ஒருமுறை மட்டும் உத்தரபிரதேச மாநில தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது அதில் மட்டும் அவர் பங்கேற்றார்.

சந்திப்பு இந்த சூழ்நிலையில்தான், முக்கிய கூட்டணிக் கட்சியான தி.மு.க.,வின் பார்லிமென்ட் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலுவுடன், சோனியாவின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. நேற்று காலை சோனியாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு, சோனியாவின் ஜன்பத் இல்லத்தில், காலை 10.30 மணியளவில், 20 நிமிடங்களுக்கு நடந்தது.

விசேஷம் ஒன்றுமில்லை சோனியாவை சந்தித்துவிட்டு வந்த டி.ஆர்.பாலுவை தொடர்பு கொண்டு கேட்டபோது,' இது வழக்கமான மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை. சோனியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்திருப்பது அனைவரும் அறிந்ததே. மத்தியில் ஆளும் கூட்டணியின் தலைவர் என்ற வகையில், அவர் பரிபூரண குணமடைவதற்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஏற்கனவே செய்தி அனுப்பியிருந்தார். தி.மு.க., தலைவரின் அந்த வாழ்த்து செய்திக்கு இந்த சந்திப்பின்போது நன்றியும், மரியாதையும் செய்வதாக சோனியா குறிப்பிட்டார். மற்றபடி வேறு எந்த விஷேசமும் இந்த சந்திப்பில் இல்லை' என்று மட்டும் தெரிவித்தார்.

பரபரப்பு : உடல்நலக் குறைவுக்கு பிறகு முழு ஓய்வில் இருந்து வரும் சோனியா, இதுவரை சொந்தகட்சியின் மூத்த முக்கிய தலைவர்களைக் கூட சந்திக்கவில்லை. இந்நிலையில், கூட்டணிக்கட்சியான தி.மு.க.,வின் பிரதிநிதியை சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழிக்கு ஜாமின் பெறுவது, '2ஜி' வழக்கு மத்திய அமைச்சர் சிதம்பரத்தை நோக்கி திரும்பியுள்ளது, போன்ற காரணங்களால் சந்திப்பு நடந்து இருக்கலாம் என, டில்லி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

- நமது டில்லி நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us