தொல்லை தரும் அழைப்புகளுக்கு 27ம் தேதி முதல் தடை அமல்
தொல்லை தரும் அழைப்புகளுக்கு 27ம் தேதி முதல் தடை அமல்
தொல்லை தரும் அழைப்புகளுக்கு 27ம் தேதி முதல் தடை அமல்
ADDED : செப் 06, 2011 12:00 AM

புதுடில்லி: வரும் 27ம் தேதி முதல், மொபைல் மற்றும் லேண்ட்லைன் போன்களுக்கு வரும், தொல்லை தரும் அழைப்புகளை தடை செய்யும் நடவடிக்கை அமலுக்கு வருகிறது.
மொபைல் மற்றும் லேண்ட்லைன் போன்களுக்கு, வர்த்தக ரீதியிலான அழைப்புகள் அதிகமாக வருவது, வாடிக்கையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. 'லோன் வேண்டுமா, உங்களுக்கு பரிசு காத்திருக்கிறது'என்பது போன்ற அழைப்புகளும், எஸ்.எம்.எஸ்.,களும், மொபைல் போன்களுக்கு அதிகமாக வரத் துவங்கின. இந்த பிரச்னைக்கு முடிவு காணும் வகையில், தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவேட்டு முறை கொண்டு வரப்படும் என, மத்திய தொலைத் தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது. இதில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, தொல்லை தரும் அழைப்புகள் வராமல் தடுக்கப்படும் என்றும், இதையும் மீறி அழைப்புகள் வந்தால், சம்பந்தபட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டதால், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், கால தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளதை அடுத்து, வரும் 27ம் தேதி முதல், இத்திட்டம் அமலுக்கு வருகிறது.