சன்ன ரக நெல் கொள்முதல் புறக்கணிப்பு: விவசாயிகள் குமுறல்
சன்ன ரக நெல் கொள்முதல் புறக்கணிப்பு: விவசாயிகள் குமுறல்
சன்ன ரக நெல் கொள்முதல் புறக்கணிப்பு: விவசாயிகள் குமுறல்
ADDED : ஆக 28, 2011 12:02 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்துறை பரிந்துரை செய்த, 'ஏடிடி 39' ரக நெல்லை, அரசு கொள்முதல் மையங்களில் வாங்காததால், உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள், கலக்கம் அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக, குறுவை சாகுபடியில், நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த பருவத்தில் வேளாண் துறை மூலம், தர்மபுரி மாவட்டத்தின் மண் மற்றும் சீதோஷண நிலைக்கு ஏற்ற நெல் ரகமான, 'ஏடிடி 39' சன்ன ரக நெல்லை சாகுபடிக்கு பரிந்துரை செய்தனர். இந்த ரகத்தை விவசாயிகள் சாகுபடி செய்து, அறுவடை செய்தனர்.அறுவடை நெல்லை, விவசாயிகள் விற்பனை செய்ய வசதியாக, தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, அரூர் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
தர்மபுரி மாவட்டத்தில், நெல் கொள்முதல் மையங்களில், 800 டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஜூலை 31ம் தேதியுடன் இலக்கை எட்டியதால், நெல் கொள்முதல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சன்ன ரக நெல் சாகுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, ஒரு மூட்டை, 600 ரூபாய் மட்டுமே வெளி மார்க்கெட்டில் விலை கிடைப்பதால், பல விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் இருப்பு வைத்துள்ளனர்.
வரும் குறுவை பருவத்தில், தர்மபுரி மாவட்ட நெல் கொள்முதல் மையங்களில், சன்ன ரக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என, நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் பலரும் தங்கள் குமுறலை தெரிவித்தனர். டெல்டா மாவட்டங்களில், மோட்டா ரக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ரகங்கள் அரைவைக்கு செல்லும் போது, 70 சதவீதம் அரிசி கிடைக்கிறது. சன்ன ரக நெல் அரைவைக்கு செல்லும் போது, 60 சதவீதம் தான் அரிசி கிடைக்கிறது. இதனால், மில் உரிமையாளர்கள் சன்ன ரகங்களை வாங்குவதில்லை; கொள்முதல் மையங்களிலும், கொள்முதல் செய்வதில்லை.காவேரிப்பட்டணத்தில், நெல்லில் உள்ள தூசிகள், கரம்பைகளை மிஷின் மூலம் அகற்றி வாங்கிக் கொள்கின்றனர். அதே போல், தர்மபுரி மாவட்ட நெல் கொள்முதல் மையங்களில், மிஷின்கள் மூலம் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.


